டெல்லி

க்களவை புதிய சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளிடையே இழுபறி நிலவுகிறது.

நடந்து  முடிந்த 18 ஆவது மக்களவை தேர்தலில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை இடங்களான 272 இடங்களை பா.ஜனதா பெற்மல் 240 இடங்களை மட்டுமே பெற்றது.  எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்குதேசம் கட்சியின் 16 எம்.பி.க்கள் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 12 எம்.பி.க்கள் மற்றும் சில கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய எம்.பி.க்கள் பதவியேற்புக்காக தற்காலிக சபாநாயகரை நியமித்து இவரது தலைமையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். பிறகு 18-வது மக்களவைக்கான சபாநாயகர் தேர்தலை தற்காலிக சபாநாயகர் நடத்துவார். வரும் 26 ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்தல் தேதி நடைபெறுகிறது.

ஏற்கனவே கடந்த 2 முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் சபாநாயகர் பதவியில் பிரச்சினை ஒன்றும் எழவில்லை. அந்த கட்சியினரே சபாநாயகராக நியமிக்கப்பட்டனர்.  இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு பதவியேற்று இருப்பதால் சபாநாயகர் பதவி மீண்டும் பா.ஜனதாவுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்பாக சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக கூறப்படுகிறது.  பாஜக தங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்கே வழங்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. பாஜகவைச் சேர்ந்தவர் சபாநாயகரானால்ல் அந்த வாய்ப்பு முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னாள் மத்திய மந்திரியும், ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவின் மகளுமான புரந்தேஸ்வரியின் பெயரும் அடிபடுகிறது. இவர் தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு மனைவியின் சகோதரி என்பதால் அந்த கட்சியும் ஒப்புக்கொள்ளும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.