சென்னை: 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
துவரை ஒருமுறை கூட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. மாநில அரசுகளுடனும், ஓ.பி.சி. அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடைவதை உறுதி செய்யும் வகையில், கிரீமிலேயர் பிரிவினரை தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்தில் இருந்து கணிசமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஓபிசி வகுப்பினரின் நலனுக்கான பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். கிரீமிலேயர் வருமான வரம்பு சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், 2017-ம் ஆண்டுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கிரிமீலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருமுறை கூட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட வில்லை.
இப்போது பாராளுமன்ற நிலைக்குழுவே இது குறித்து பரிந்துரை செய்திருக்கும் நிலையில், அதை ஏற்று மாநில அரசுகளுடனும், ஓ.பி.சி. அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.