சென்னை:
ரட்டை கொலை: பண்ணை வீட்டில் உடலை புதைத்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டரையும், அவரது மனைவியையும், கொலை செய்த கார் ஓட்டுநர், நெமிலியில் உள்ள பண்ணை வீட்டில் உடல்களை புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் நேற்று தான் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ளனர். இருவரும் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட தம்பதிக்கு சொந்தமான விலை உயர்ந்த பொருள்களுடன் காரில் தப்பிச் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கிருஷ்ணாவை, ஆந்திராவில் ஓங்கோல் பகுதியில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். காரில், கிருஷ்ணாவுடன் இருந்த அவரது நண்பர் ரவியும் கைது செய்யப்பட்டார்.

காவல் துறை கூற்றுப்படி, ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60), அவரது மனைவி அனுராதா (55) ஆகிய இருவரும், தங்கள் மகள் சுனந்தா பிரசவத்திற்காக அமெரிக்கா சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை வந்துள்ளனர். கார் டிரைவர் கிருஷ்ணா, இருவரையும் விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு சென்ற பெற்றோரை மொபைலில் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த சுனந்தா தனது உறவினர்களை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார. அவர்கள் பார்கையில் வீடு பூட்டியிருந்ததால், மயிலாப்பூர் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த போலீஸ் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், பல அறைகளில் ரத்த கறை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து விசாரணையை தொடங்கியதில், தம்பதிக்கு நெமிலியில் சொந்தமாக பண்ணை வீடு இருப்பதும், அங்கிருந்த கார் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது.

பின்னர், காரின் விவரங்களை வைத்து செக் செய்கையில், சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் பாஸ்டேக் உபயோகித்த தகவல்கள் கிடைத்துள்ளது. உடனடியாக, அங்கிருக்கும் காவல துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

ஆந்திரா போலீஸ் நடத்திய தேடுதல் வேட்டையில், ஓங்கோல் பகுதியில் காரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், தம்பதியை நகை, பணத்திற்காக கொன்றதாக கிருஷ்ணா ஒப்புக்கொண்டுள்ளார். அவர்களது உடலை பண்ணை வீட்டில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.