கோவை: சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என கோவை மாவட்டத்தில் தேர்தல்பரப்புரை மேற்கொண்டுள்ள மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் பிரசாரப் பயணங்களை முன்னெடுத்து வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கமல்ஹாசனும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது 5வது கட்ட தேர்தல் பிரசாரத்தை கொங்கு மண்டலத்தில் துவங்கி உள்ளார்.
கோவை மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கோவை சென்றடைந்த கமல்ஹாசன் அங்கு தொழில்துறையினரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மசக்காளிபாளையம் பகுதியில் பொதுமக்களை சந்திதார். அப்போது, எனக்கு கூட்டம் கூடுவதால், சினிமாக்காரனுக்கு கூடும் கூட்டம் என்று சிலர் கொக்கரிக்கின்றனர். உண்மையில் இது தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கூடும் கூட்டமாகும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறேன். மக்கள் ஆணையிட்டால் அது நிறைவேறும் என்றார்.
தொடர்ந்து இன்று கோவை துடியலூர் பகுதியில் மக்களை சந்தித்து வருகிறார். அப்போது அங்கு திரண்ட மக்களிடையே பேசிய கமல்ஹாசன், தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. இந்த தேர்தல் சரித்திரம் நமக்கு தந்திருக்கும் அரிய வாய்ப்பு என்றவர், இந்த தேர்தல் கட்சிக்கும், கட்சிக்குமான போர் அல்ல. ஊழலுக்கும், நேர்மைக்குமான போர். இது பணம் கொடுத்து கூட்டிய கூட்டமல்ல. அன்பால் கூடிய கூட்டம்.
3 மாதங்களுக்கு பிறகும் இதேபோல வாழ்க்கை வாழ போகிறோமா? தமிழகத்தை சீரமைக்க போகிறோமா? செய்த தவறை திரும்ப செய்பவர்களை அறிவுரை சொல்லி மாற்றத்திற்கு வாக்களிக்க செய்யுங்கள். சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள். சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.
தொடர்ந்து, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.