கடலூர்: கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட மக்களின் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டதுடன், மத்தியஅரசுசையும் கடுமையாக சாடினார். தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்கவேண்டும் என்று ஆசை படாதீர்கள், ”தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இரண்டு நாள் பயணமாக கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
கடலூர் மாவட்டத்தில் ரூ. 1476 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
என் பாசத்திற்குரிய மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்திருக்கக்கூடிய தாய்மார்களே, சகோதரிகளே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையை சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். உங்களை எல்லாம் பார்க்கும்போது, நம்முடைய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், சி.வி. கணேசனும் கடலூரில் மனித கடலையே உருவாக்கியிருக்கிறார்கள் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது!
சோழர் காலத்தில், கடல் வாணிபம் செழித்த ஊர்! புனித டேவிட் கோட்டை அமைந்துள்ள ஊர்! கருணையே வடிவான வள்ளலார் வலம் வந்த மாவட்டம்! தமிழ்நாட்டின் புது வரலாற்றுக்குத் தொடக்கமாக அமைந்த, நீதிக்கட்சியின் ஏ.சுப்பராயலு ரெட்டியார் பிறந்த மாவட்டம் இந்த கடலூர் மாவட்டம்! இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்த மாவட்டத்தில், இந்த அரசு விழாவை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய இந்த மண்ணின் மைந்தர்களான வேளாண் துறை அமைச்சர் ஆருயிர் சகோதரர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களையும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அருமை சகோதரர் சி.வி. கணேசன் அவர்களையும் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முதலாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் நம்முடைய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள்! தலைவர் கலைஞரால் “வேங்கை”என்று அழைக்கப்பட்ட எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தியின் மகன்! வேங்கையின் மைந்தன்! அவரது பெயரைத்தான், சேத்தியாத்தோப்பில் இருக்கின்ற ‘கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு’தலைவர் கலைஞர் சூட்டினார்!
நம்முடைய திட்டங்களால் “மண்ணும் செழித்தது; மக்களும் மகிழ்ந்தார்கள்” என்ற வரலாற்றை உருவாக்கி இருப்பவர்தான், நம்முடைய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள்!
அதேபோல் நம்முடைய சி.வி. கணேசன் அவர்கள், தொழிலாளர்களின் தோழனாக பாட்டாளிகளின் பாதுகாவலனாக ஒடுக்கப்பட்டோரின் ஒளிவிளக்காக நம்முடைய அரசு செயல்பட துணையாக இருக்கக்கூடியவர்!
தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமல்ல; இளைஞர்களை திறன் மிக்கவர்களாக வளர்த்தெடுத்து, அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்கிக் கொண்டிருக்கிறார் நம்முடைய கணேசன் அவர்கள்! மாவட்டம்தோறும் அவர் முயற்சியால் நடத்தப்படும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் பல இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோரது வழிகாட்டுதல்களின் படி, நம்முடைய மாவட்டத்தின் ஆட்சித் தலைவர், அதேபோல் அவருக்கு துணை நிற்கக்கூடிய அனைத்துத் துறையின் அதிகாரிகள், அலுவலர்களின் செயல் வேகத்தோடு இந்த விழா மிகப்பெரிய எழுச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமான அத்தனை பேரையும் நான் பாராட்டுகிறேன்; அவர்களுக்கு எல்லாம் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைகின்ற போதெல்லாம் இந்த கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்திற்கு கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஏராளமான சாதனைகளை செய்து கொடுத்திருக்கிறோம். அதில் முக்கியமான சிலவற்றை நான் சொல்லவேண்டும் என்றால்,
கடலூர் மாவட்டமும், நாகை மாவட்டமும் இணையும் கொள்ளிடத்தில் 52 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டிய அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு! பண்ருட்டியில் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி! சோனம் குப்பம், சொத்தி குப்பம், தாழங்குடா போன்ற பகுதிகளுக்கு ஆற்றின் மீது மேம்பாலங்கள்! உறையூரில் துணைமின் நிலையம்! நெல்லிக்குப்பத்தில் புதிய பேருந்து நிலையம்! பண்ருட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்! கடலூரில் மாவட்ட காவல்துறை அலுவலகம், நீதிமன்றக் கட்டடம், வட்டாட்சியர் அலுவலக கட்டடம் காட்டுமன்னார் கோயிலில் வட்டாட்சியர் அலுவலகம்! குறிஞ்சிப்பாடி புதிய தாலுகாவாக உருவாகியது! குறிஞ்சிப்பாடியில் புதிய மருத்துவமனை! திருப்பாதிரிப்புலியூர் சுரங்கப்பாதை, ரயில்வே மேம்பாலம்!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில், கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமான புதிய திட்டங்கள் சாதனைகள் செய்து தரப்பட்டிருப்பதை நீங்கள் இந்த வீடியோவில் பார்த்தீர்கள். அதில் சிலவற்றை மாத்திரம் உங்களுக்கு நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பிச்சாவரம் சுற்றுலா மைய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
கடலூர் மாநகராட்சி அண்ணா பாலத்திற்கு அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் கூட்டு குடிநீர் திட்டம் 255 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் வட்டங்களில் பரவனாற்றின் குறுக்கே அருவாள்-மூக்கு என்ற இடத்தில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கவும், வெள்ள நீரை விரைவாக வடிய வைக்கவும், 81 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குறிஞ்சிப்பாடி வட்டத்தில், பெருமாள் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, கொள்ளளவை மேம்படுத்தும் பணி, 119 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு, மக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் புதிய கால்நடைத் தீவன ஆலை 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கே அமர்ந்திருக்கக்கூடிய நம்முடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் திரு. சிந்தனைச் செல்வன் அவர்களின் கோரிக்கையை ஏற்று, நம்முடைய அருமை பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்கு சிலையுடன் கூடிய நினைவரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது! விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், 77 மருத்துவ உட்கட்டமைப்புகள் செய்து தரப்பட்டிருக்கிறது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 125 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 789 கிலோ மீட்டர் சாலைகளும்,நகர்ப்புறப் பகுதிகளில், 590 கிலோ மீட்டர் சாலைகளும், நெடுஞ்சாலைத் துறையால் 778 கிலோ மீட்டர் சாலைகளும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
50 பாலங்கள் கட்டும் பணிகள் திட்டமிடப்பட்டு, 39 பாலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆயிரத்து 44 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. 97 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். இப்படி இன்னும் நிறைய இருக்கிறது!
இந்தப் பணிகளின் தொடர்ச்சியாக, இந்த விழாவின் மூலமாக பத்து அறிவிப்புகளை நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு :- திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன் பெறும் வகையில், 130 கோடி ரூபாய் செலவில் வெலிங்டன் ஏரியில், கரைகளை பலப்படுத்துவது, வாய்க்காலை புனரமைப்பது போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இரண்டாவது அறிவிப்பு:- கடலூர் மாநகராட்சியில் இருக்கின்ற மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு:- நம்முடைய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் – சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் அவர்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கையை எழுப்பினார். எங்களுக்குக் கூட சில நேரம் கோபம் வந்தது. ஆனால் அந்த கோபம் இருக்கக்கூடிய இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வார்கள். எனவே, அந்த உணர்வோடு நான் இங்கே மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். பண்ருட்டி தொகுதியில், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று, 15 கோடி ரூபாய் செலவில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு :- புவனகிரி மற்றும் சிதம்பரம் பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில், முட்லூரில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை இருக்கும் இரண்டு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு :- நெய்வேலி பகுதியில், கெடிலம் ஆற்றங்கரையில், செம்மேடு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு கிராமங்களில் 36 கோடி ரூபாய் செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆறாவது அறிவிப்பு :- திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில், எம்.புதூர் முதல் திருவந்திபுரம் வரை உள்ள சாலை, 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
ஏழாவது அறிவிப்பு :- குறிஞ்சிப்பாடியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
எட்டாவது அறிவிப்பு: – காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் மற்றும் புவனகிரி பகுதிகளுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 63 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். (சிந்தனைச் செல்வன் அவர்கள் கரவொலி எழுப்புகிறார்).
ஒன்பதாவது அறிவிப்பு :- கடலூர் வட்டத்தில், பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை குறைக்க, தென்பெண்ணை ஆற்றில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பத்தாவது அறிவிப்பு : – இன்றைக்கு உலகத் தாய்மொழிகள் நாள்! நம்முடைய தாய்மொழியான தமிழைக் காக்க தன்னுயிரை ஈந்த மாணவர் ராசேந்திரனின் நினைவிடம் புதுப்பிக்கப்படும்! திட்டங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதருக்கும் தேவையான நன்மைகளை செய்யும் அரசாக நம்முடைய அரசு இருக்கிறது! திட்டங்களை ஏதோ மேடைகளில் அறிவித்தோம்; கோப்புகளில் இருக்கிறது என்று சொல்லாமல், மக்களின் இதயங்களில் கொண்டு போய் சேர்க்கின்ற வரைக்கும், அந்த நன்மைகளைக் கொண்டு போய் சேர்க்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
என்னுடைய ஒரே இலக்கு, மக்கள்தான்! மக்களுக்கான நன்மை தான்! மக்களின் மகிழ்ச்சி தான்! மகாபாரதத்தில் வரும் ஒரு கதையை தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார். மரக்கிளையில் அமர்ந்திருக்கும் கிளியின் கண்ணுக்கு குறி வைத்து அம்பால் அடிக்கவேண்டும் என்று சீடர்களுக்கு கட்டளையிட்டார் குருநாதர். ஒவ்வொரு சீடரும் வில்லைப் பிடித்து குறி பார்த்தார்கள். யார் யாருக்கு என்ன தெரிகிறது?-என்று குரு கேட்டார். ஒருவர் மரம் தெரிகிறது என்றார். மற்றொருவர் கிளை தெரிகிறது என்றார். மற்றொருவர் கிளி தெரிகிறது என்றார். ஒரே ஒருவர் மட்டும் தான், ‘குருவே, எனக்கு கிளியின் கண் தெரிகிறது’ என்று சொன்னாராம். இலட்சியவாதிக்கு அவனுடைய கொள்கை மட்டும்தான் தெரியவேண்டும் என்று எடுத்துக்காட்டாக நம்முடைய தலைவர் கலைஞர் இந்த கதையை சொல்வார்.
அதைப்போல் மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய நன்மை மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரியும். அவதூறுகள் வீண் புகார்கள் வெட்டிப் பேச்சுகளில் நான் கவனத்தை செலுத்துவது இல்லை. அதனால்தான் இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களைத் தீட்ட முடிந்தது.
நான் போகும் இடமெல்லாம் மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சிதான் விடியலின் அடையாளம்! மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தேன். அங்கிருந்து 5 நிமிடத்திலிருந்து 10 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிட முடியும். அங்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் நான் நடந்தே வந்தேன். காரணம் என்ன? இது இங்கு மட்டுமல்ல. எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் இதே நிலைதான். என்ன காரணம் என்று கேட்டால், தேர்தல் நேரத்தில் அறிவித்த உறுதிமொழிகள் மட்டுமல்ல, அறிவிக்கப்படாத திட்டங்களை, அறிவிக்கப்படாத வாக்குறுதிகளை சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்துகொண்டிருக்கக்கூடிய ஆட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்று வாழ்த்து முழங்கக்கூடிய அந்த காட்சியை நான் பார்க்கிறேன். இந்தச் சமூகத்தை தாங்கி நிற்கும் தூணாக விளங்கும் மகளிரின் வாழ்வுக்குத் துணையாக மாதம் ஆயிரம் ரூபாயை, ஒரு கோடியே 14 இலட்சம் சகோதரிகளுக்கு உரிமைத்தொகையாக கொடுக்கிறோம்! ”எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர்”-என்று என் சகோதரிகள் சொல்வதுதான் எனக்கான பெருமை!
பெண்கள் கல்வி – வேலைவாய்ப்பு பெற்று, வாழ்க்கையில் முன்னேற ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மகளிர் முன்னேற்றத்திற்கு சிறிய தடை கூட ஏற்படக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே, விடியல் பயணம் திட்டத்தை செயல்படுத்தினேன்!
இது போன்ற திட்டங்கள், தேவையுள்ள அத்தனைப் பேருக்கும் பாகுபாடு இல்லாமல் கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான், மகளிருக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில், அடுத்ததாக, திருநர்கள் – மாற்றுத் திறனாளிகள் – அவர்களின் துணையர் என்று எல்லோருக்கும் விடியல் பயணத்தின் பயனை வழங்கினோம்!
அதேபோன்றுதான், வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளமாக விளங்கும் நம்முடைய அரசுப் பள்ளி மாணவ – மாணவியர் கல்வியில் உயர்ந்து நிற்கவேண்டும். அவர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைக்கவேண்டும் என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
காலையிலேயே பள்ளிக்கு வரும் குழந்தைகள் வயிற்று பசியோடு இருக்க கூடாது என்று காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தோம்!
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குப் போகும் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஆண்டுக்கு பன்னிரெண்டாயிரம் ரூபாய் வழங்குகிறோம்!
நம்முடைய மாணவர்கள் வகுப்பறைக் கல்வியைத் தாண்டி தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு, பெரிய பெரிய வேலைகளுக்கு செல்ல வேண்டும்; தங்களின் குடும்பங்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ‘நான் முதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்!
கல்வியைப் போலவே மருத்துவமும் தடையில்லாமல் கிடைக்க, மக்களைத் தேடி மருத்துவம் என்று ஒவ்வொருவருடைய வீடுகளுக்கே சென்று, அவர்களை கவனித்துக்கொள்கிறோம்! தொற்றா-நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்த மக்கள் பலரை, அந்த நோய்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறோம்!
அடுத்து, பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவது, நீரிழிவு நோயால்தான்! பலர் தங்களின் கால்களை இழக்க நேரிடுகிறது. இதை தடுக்க “பாதம் பாதுகாப்போம்” என்ற திட்டத்தை சிறப்பாக இப்போது செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்!
அதேபோல், மாரடைப்பு பல உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. இதை தடுக்க, “இதயம் காப்போம்” திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்! விபத்து ஏற்பட்டால், முதல் 48 மணி நேர சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில், ’இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டத்தின் மூலமாக, பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிக்கொண்டு வருகிறோம்!
அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்வதில் இருந்து, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என்று எல்லோருக்குமான ஆட்சியை நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்!
அதனால்தான் நான் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்! இந்தியாவுக்கே முன்மாதிரியான அரசு நம்முடைய திராவிட மாடல் அரசு! நான் இன்னும்கூட சொல்கிறேன். சவாலாகவே சொல்கிறேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்து செய்யும் அரசு இருக்கிறதா?
ஒரு மாநிலம் வளர்கிறது என்றால், அந்த மாநிலத்தை உள்ளடக்கி ஆளக்கூடிய ஒன்றிய அரசு மகிழ்ச்சிதான் அடையவேண்டும். அதுதான் உண்மையான கூட்டாட்சித் தத்துவம்! மாநிலங்கள் வளர்ந்தால் அதன் மூலமாக நாடும் வளரும். மாநிலத்தின் வளர்ச்சியால் நாடுதான் பயன் பெறும், நாடுதான் பலம் பெறும். ஆனால், இன்றைக்கு ஒன்றியத்தை ஆளக் கூடிய அரசு மாநிலங்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் அரசாக இருக்கிறது. மாநில வளர்ச்சியைத் தடுக்கும் அரசாக இருக்கிறது. ஜி.எஸ்.டி. மூலமாக நம்முடைய மாநிலத்தின் நிதி வளத்தை மொத்தமாக கபளீகரம் செய்தார்கள். மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். மாநிலங்களுக்கு புதிய திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார்கள். ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கான தொகையைக் கூட தர மறுக்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் சகித்துக்கொண்டும், சமாளித்துக்கொண்டும் தான் நாம் திட்டங்களைத் தீட்டி வருகிறோம். அதையும் தாண்டி வளர்கிறோம். அதுதான் அவர்கள் கண்ணை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதை தடுக்க பல்வேறு தடைகளை உருவாக்குகிறார்கள். புதிய புதிய சட்டங்கள் மூலமாக சங்கடங்களை உருவாக்குகிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரில் நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்கப் பார்க்கிறார்கள்.
படிக்கக் கூடாது, பள்ளிக் கூடங்களை மிதிக்கக் கூடாது, வேலைகளை அடையக் கூடாது என்று 100 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் நம்முடைய மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். வகுப்புவாரி உரிமை என்று சொல்லும் சமூகநீதியை உருவாக்கி பட்டியலின மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், கல்விச் சாலையின் கதவைத் திறந்து வைத்தோம். இன்றைக்கு இவ்வளவு பேர் படிக்கவும் வேலைகளைப் பெறவும் அதுதான் அடித்தளம் அமைத்தது. அந்த சமூகநீதியை சிதைக்கத்தான் தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலமாக, தமிழ்நாட்டு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் தடுக்கப்படும். மீண்டும் கல்விச் சாலைகளுக்குள் வரவிடாமல் தடுக்கப்படுவார்கள்.
இது போன்ற ஏராளமான தடைகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நேற்றையதினம், நம்முடைய மாண்புமிகு இந்திய நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் கடிதம் எழுதினேன்.
அதற்கு இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்கள் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார். நான் கேட்கிறேன். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான், கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியைத் தருவோம் என்று ‘Blackmail’ செய்வதற்கு பெயர் என்ன? அரசியல் இல்லையா?
கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழிகள் கொண்ட இந்திய நாட்டை – ஒரு மொழி நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா?பல்வேறு மொழி பேசும் இன மக்கள் வாழும் நாட்டை, ஒற்றை இன நாடாக மாற்ற நினைப்பது அரசியல் இல்லையா? ஒரு திட்டத்திற்கான நிதியை, மற்றொரு திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனையாக மாற்றுவது அரசியல் இல்லையா? நீங்கள் செய்வது அரசியலா? இல்லையா? என்பதை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?. மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசின் நிதியை செலவு செய்பவர்கள் நாங்கள். அரசின் நிதியை மதவெறிக்காகவும் இந்தி – சமஸ்கிருத திணிப்புக்காகவும் செலவு செய்பவர்கள் நீங்கள்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு 5,000 கோடி ரூபாய் இழக்கிறது என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே… தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும்… மறந்துவிடாதீர்கள்! கொடுத்து பெறுவதுதான் கூட்டாட்சித் தத்துவம்! அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை! அதைகூட புரிந்துக்கொள்ளாதவர்கள் ஒன்றியத்தை ஆள்வதுதான் இந்தியாவுக்கே மிகப்பெரிய சாபக்கேடு!
தேசியக் கல்விக் கொள்கை என்பதே, கல்வியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. இந்தியை வளர்க்க கொண்டு வரப்பட்டிருக்கிறது! நேரடியாக திணித்தால் எதிர்ப்பார்கள் என்று, கல்விக் கொள்கை மூலமாக முலாம் பூசி திணிக்கிறார்கள்! தாய் மொழியை வளர்க்கப் போவதாக ஒன்றிய அமைச்சர் சொல்கிறார்.
தர்மேந்திர பிரதான் அவர்களே… தாய்மொழித் தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியும். இந்தி மொழியால் தங்களின் தாய்மொழிகளை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் சதி திட்டத்தின் ஆபத்து புரியும்! நீங்கள் வந்துதான் வளர்ப்பீர்கள் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை!
ஒன்றிய அரசுக்கு நான் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறேன். தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்கவேண்டும் என்று ஆசை படாதீர்கள்! தமிழுக்கும் – தமிழ்நாட்டுக்கும் – தமிழினத்துக்கும் எதிரான எந்தச் செயல்பாடுகளும் நான் இருக்கும்வரைக்கும், தி.மு.க. இருக்கும்வரைக்கும் நிச்சயம், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரைக்கும் இந்த மண்ணுக்குள் வர முடியாது!
நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொருத்தவரைக்கும் மக்கள் முன்னேற்றம் ஒரு பக்கம் என்றால், அதற்கான தடைகளை உடைப்பது இன்னொரு பக்கம் என்று இரு பாதை பாய்ச்சலை இன்றைய தமிழ்நாடு அரசு நடத்திக்கொண்டு வருகிறது. இது போன்ற தடைகள் எங்களுக்குப் புதிதல்ல. தடைகள் எந்தப் பக்கம் வந்தாலும், அதை உடை என்று பழகியவர்கள் நாங்கள் என்பதால் வெற்றிப் பயணத்தை தொடர்கிறோம். மக்களான உங்களுடைய ஆதரவால் வெற்றி என்றென்றும் தொடரும்! தொடரும்! தொடரும்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.