சென்னை: ‘பொய்யை பரப்பாதீர்கள்’  என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனத்துக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு பதில் அளித்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் பெய்து வரும் மழை குறித்த விமர்சனம் செய்திருந்தார். அவரது பதிவில், தற்போது பெய்துள்ள 6 செ.மீ மழைக்கே சென்னை மிதக்கிறது, இந்த நிலையில், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசின் மழைநீர் வடிகால் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிககைகளை பலன் அளிக்கவில்லை என்றும்,  சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அதில்,  சென்னையில் 6 சென்டிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளதாக தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராமதாஸ் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு சென்னையில்  வெளியிட்டுள்ள பதிவில்,  “சென்னையில் நேற்று (14.10.2024) காலை 8.30 மணி முதல் இன்று (15.10.2024) காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக எண்ணூரில் 10 செ.மீ மழையும், மணலி, திருவிக நகர், பொன்னேரி, ராயபுரம், கொளத்தூரில் 9 செ.மீ மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோடம்பாக்கம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை பகுதிகளில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”

இவ்வாறு தமிழ்நாடு உண்மை சரிப்பார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

சென்னையில் திமுக அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் பயனளிக்கவில்லை! பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு