ரஷ்யா-உக்ரைன் மோதல் உடனடியாக முடிவடையும் அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை “நெருப்புடன் விளையாடுகிறார்” என்று எச்சரித்துள்ளார்.

“நான் மட்டும் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு ஏற்கனவே நிறைய மோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை விளாடிமிர் புடினுக்குத் தெரியாது, நான் சொல்வது மிகவும் மோசமானது. அவர் நெருப்புடன் விளையாடுகிறார்!” என்று செவ்வாயன்று டிரம்ப் சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் இருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் மூலம் வாஷிங்டனுக்கு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “புடின் செய்வதில் நான் மகிழ்ச்சியடையவில்லை” என்று கூறினார்.

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “புடின் ‘முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்!’ என்று பதிவிட்டிருந்தார்.

தவிர புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இருவரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஜெலென்ஸ்கி குறித்து, “அவர் செய்யும் விதத்தில் பேசுவதன் மூலம் தனது நாட்டிற்கு எந்த உதவியும் செய்யவில்லை” என்று கூறினார், முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று சமீபத்திய ரஷ்ய தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் மௌனத்தை ஜெலென்ஸ்கி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர்நிறுத்தம் அமெரிக்காவை விரக்தியடையச் செய்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிச் செல்லப்போவதாக டிரம்ப் நிர்வாகம் சமீபத்திய மாதங்களில் எச்சரித்துள்ளது.

டிரம்பின் அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் செவ்வாயன்று ஒரு சமூக ஊடகப் பதிவில், “புடின் ‘நெருப்புடன் விளையாடுகிறார்’ மற்றும் ‘மிகவும் மோசமான விஷயங்கள்’ ரஷ்யாவிற்கு நடக்கிறது என்ற டிரம்பின் வார்த்தைகள் குறித்து. எனக்கு ஒரு மோசமான விஷயம் மட்டுமே தெரியும் – மூன்றாம் உலகப் போர். டிரம்ப் இதைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.