டில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் உள்பட பல வழக்குகளில் சிக்கி உள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் சட்டத்தின் துணைகொண்டு விளையாட வேண்டாம் என்று கார்த்தி சிதம்பரத் துக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். அதேவேளையில் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. ஆனால், கார்த்தி சிதம்பரம் அதற்கும் முன்ஜாமின் பெற்றுள் ளார்.
இந்த நிலையில், சொந்த அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல அனு மதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையின்போது. கார்த்தி சிதம்பரம் ரூ.10 கோடி பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைளுடன் வெளிநாடு செல்ல உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, கார்த்தி வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும், அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து, கார்த்தியிடம் விசாரணை நடக்கும் தேதியை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் சரியான நேரத்துக்கு ஆஜராக வேண்டும். முன்புபோல் இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சட்டத்தோடு விளையாட நினைத்தால் இனி கடவுளால் மட்டுமே கார்த்தி சிதம்பரத்துக்கு உதவ முடியும்” என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், 10 கோடி ரூபாயை உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் பிணையத் தொகையாக செலுத்தி விட்டு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கார்த்தி சிதம்பரத்தை மார்ச் மாதம் 5, 6, 7 மற்றும் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டு உள்ளது.