தாஜ்மஹாலின் மூடப்பட்ட 22 அறைகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திறக்க உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

தேஜோ மஹாலயா என்று அழைக்கப்படும் ஒரு சிவன் கோவில் இருந்த இடத்தை தாஜ் மஹால் என்று மாற்றிவிட்டதாக அதன் தோற்றம் பற்றி எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்க, நினைவுச்சின்னத்தின் “உண்மையான வரலாற்றை” வெளிப்படுத்த அரசாங்கம் உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், “தயவுசெய்து, பொதுநல வழக்கு முறையை கேலி செய்ய வேண்டாம்” என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், “யாரிடமிருந்து தகவல்களைக் கேட்கிறீர்கள்? பாதுகாப்பு காரணங்களுக்காக அறைகள் மூடப்பட்டிருப்பது உங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்றால் முதலில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்துவிட்டு மனு அளியுங்கள். பொதுநல வழக்கு முறையை கிண்டல் செய்யாதீர்கள்” என்று காட்டமாக பதிலளித்துள்ளனர்.