டெல்லி: எல்லை விவகாரத்தில்  இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் பேசியதாவது: எல்லையில் தன்னிச்சையாக மாற்றம் ஏற்படுத்த சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

லடாக்கின் கிழக்கில் கல்வான் பகுதியில் வீரமரணம் அடைந்தவர்களின் தியாகம் வீண்போகாது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். எல்லையில் நிலவும் பிரச்னையை பேச்சுவார்த்தையாகவும், அரசியல் ரீதியாகவும் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ளோம்.

அதற்காக, இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம். இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம். எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 8 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தற்போதைய பிரச்னைக்கு பரஸ்பரம் ஏற்று கொள்ளப்படும் வகையில் தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.

நமது அண்டை நாடு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது.  தீவிரவாத பயிற்சி முகாம்கள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் 400 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது பாகிஸ்தான் அத்துமீறல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.