அடுத்த மாதம் உத்திர பிரதேச மாநில சட்ட மன்ற தேர்தலில் நமது கட்சி வெற்றி பெறுவது உறுதி இல்லை என்று பாரதிய ஜனதாகட்சி தேசிய தலைவர் அமித்ஷாவிடம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பிரச்சார யுக்திகள் குறித்து அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
மோடி அரசின் ரூபாய் நோட்டு தடையால் அம்மாநில சராசரி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும். ஒன்றரை மாதமாகியும் நிலைமை சீர்செய்யப் படாததால் மக்கள் மத்திய பாஜக அரசின்மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்றும் அவர்கள் அமித்ஷாவிடம் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர்களான உமா பாரதி மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் உடனிருந்தனர். பாஜகவுக்கு அம்மாநிலத்தில் எதிர்மறையான சூழல் நிலவுவதால் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.