தமிழரசன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவர் மாரிசாமி. தமிழ் மீது கொண்ட அளப்பறிய ஈடுபாட்டினால் தனது பெயரை தமிழரசன் என மாற்றி வைத்துக் கொண்டார்.

44 வயதான தமிழரசன் தினந்தோறும் ரூ. 410 சம்பளத்துக்கு எழுத்தராக பணிபுரிந்து வந்தார். அனைருக்கும் ஓடிப்போய் உதவும் கொண்டவர் என்கிறார்கள் இவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும்.

இவரது அயராத முயற்சியின் பலனாக இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில்  செயல்படும்  அரசுப் பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் எட்டு ஆண்டுகளுக்கு முன் நிதி திரட்டி அளித்திருக்கிறார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துவக்க காலத்தில் இருந்தே  போராடிவந்திருக்கிறார்.

புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்பில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த இவர், பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால்தான்  அவரை காவல்துறையினர் குறிவைத்து சுட்டுக்கொன்றதாக அவரது அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தினர்

அரசு நியாயவிலை கடையில் பணிபுரியும் அவரது அண்ணன் முனியசாமி, ” நாங்கள் எந்த அரசியல் கட்சி தலைவரிடமிருந்தும் பணம் பெறவில்லை. அதில் எங்களுக்கு  விருப்பமில்லை. மக்கள் போராட்டத்துக்காக தமிழரசன் உயிரிழந்துள்ள நிலையில் பணம் வாங்க கூடாது என்று தீர்மானித்தோம்.  எங்கள் வீட்டுக்கு வந்த அரசியல் கட்சி தலைவர்களிடமும் இதையே கூறினோம். ஆனால் அரசு கொடுக்கும் இழப்பீட்டை வாங்கியே தீர  வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தி எங்களை அந்த தொகையை வாங்க வைத்தனர்.  உடலையும் அதே போல கட்டாயப்படுத்தி நிர்பந்தப்படுத்தி வாங்க வைத்துள்ளனர். நான் எந்த சாதியை சேர்ந்தவனோ அதே சாதியை சேர்ந்த அதிகாரிகளை என்னிடம் பேச அனுப்புகிறார்கள். எங்கள் குடும்பத்துக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை பயன்படுத்தி எங்களை நிர்பந்தப்படுத்தி பணம் வாங்க வைத்துவிட்டனர்” என்றார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகும் காவல்துறையினரின் கெடுபிடி தொடர்வதாக தமிழரசனின் உறவினர் கனிமொழி கூறுகிறார். “துக்கம் விசாரிக்க வந்த தமிழரசனின் நண்பர்கள் 12 பேரை காவல்துறையினர் வீட்டுக்குள் புகுந்து அடித்து கைது செய்துள்ளனர்.  மேலும் தமிழரசன்  இறுதி சடங்குக்கு மக்கள் திரளாக வரக்கூடாது என்பதற்காக அவர்களை வரும் வழியிலேயே தடுத்தி நிறுத்தினர்.

இறுதி சடங்கின் நேரத்தை வேண்டுமென்றே காவல்துறையினர் மாற்றி கூறி திசைதிருப்பினர்” என்கிறார்.