சென்னை: தவெக எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது. இதில், திமுக 23 கட்சிகளுடன் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்பட சில கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில் நாதக, தவெக தனித்து களமிறங்குகிறது. இதனால் 4முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தவெக தலைவர் விஜய்க்கு கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அழைத்த நிலையில், தவெக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவி வந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாகவும், விஜய்க்கு எதிர்காலத்தில் முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகின. சில அதிமுக, பாஜகவினரும் இதை வரவேற்று பேசியிருந்தனர்.
இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் பதிவில், “வதந்திகளை நம்ப வேண்டாம்!
சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப் பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.
பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! வாய்மையே வெல்லும்!”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]