சண்டிகார்:
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை, நடந்தது நடந்துவிட்டது என பேசிய காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவை மன்னிப்பு கேட்குமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
பஞ்சாபில் மே 19-ம் தேதி இறுதி கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது.
இந்நிலையில், 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை, நடந்தது நடந்து விட்டது என காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்திருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வார்த்தை காங்கிரஸின் நடத்தை, மன நிலை மற்றும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தி பிரிண்ட் இணையத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், சாம் பிட்ரோடாவின் இத்தகைய கருத்து எல்லை மீறீயதாகும். புத்தியில்லாமல் தெரிவித்த இந்த கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கிறேன்.
பெரும் வலியை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். இதற்காக அவர் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சை நான் எப்போதும் ஊக்குவிப்பதில்லை.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், கடந்த 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும்,சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்த கலவரத்தில் நடந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விசயத்தில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.