அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த வியாழனன்று தொலைபேசியில் பேசியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
புடினுடனான உரையாடலின் போது உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கடந்த புதனன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடமும் பேசியதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை 24 மணி நேரத்தில் நிறுத்துவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார், இருந்தபோதும் அதனை எப்படி செயல்படுத்துவார் என்று அவர் அப்போது தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் பேசியுள்ள டிரம்ப், புடினிடம் “ஐரோப்பாவில் அமெரிக்க ராணுவம் கணிசமான அளவு குவிக்கப்பட்டுள்ளது” என்பதை நினைவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் போர் குறித்து டிரம்புடன் விவாதிக்க ரஷ்ய அதிபர் தயாராக இருப்பதாகவும், அதனால் அவர் ரஷ்யாவின் கோரிக்கைகளை மாற்றத் திட்டமிடுகிறார் என்று அர்த்தமில்லை என்றும் கிரெம்ளின் கூறியுள்ளது.
தற்போதைய போருக்கு முற்றுப்புள்ளி வைக்க தனது ஜூன் 14ம் தேதி விதிமுறைகளை புட்டின் கோடிட்டுக் காட்டினார்.
விதிமுறைகளின்படி, உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான அதன் நோக்கங்களைக் கைவிட்டு, ரஷ்யாவால் உரிமை கோரப்படும் நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து நிலங்களிலிருந்தும் அதன் அனைத்து ஆயுதப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை உக்ரைன் ஏற்கனவே நிராகரித்த நிலையில் இந்த புதிய பேச்சுவார்த்தை போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து எந்தவித தெளிவான பதிலும் இல்லை.
டிரம்ப்-பின் இந்த உரையாடல் நேர்மறையான சமிக்ஞைகளை கொண்டிருந்ததாகக் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிறன்று கூறினார், அதேவேளையில், டொனால்ட் டிரம்ப் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை விட “குறைவாக கணிக்கக்கூடியவர்”.என்று கூறினார்.
“அமைதிக்கு வழிவகுக்கும் ஒரு ஒப்பந்தத்தை அவரால் செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார்” என்று பெஸ்கோவ் ரோசியா 1 இன் கிரெம்ளின் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறினார். “குறைந்த பட்சம், அவர் அமைதியைப் பற்றி பேசுகிறார்; அவர் மோதலைப் பற்றியோ அல்லது ரஷ்யா மீது தோல்வியை ஏற்படுத்த விரும்புவதைப் பற்றியோ பேசவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர தேவையான நேரடி பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகளை டொனால்ட் டிரம்ப் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.