நியூயார்க்:
டிக் டாக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யப் போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவும் சிறிய வீடியோ செயலியான டிக் டாக்கை தடை செய்யும் என்று தெரிவித்துள்ளார். உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, தங்களுக்கு சீனாவால் தான் இந்த நிலை என்று ஆணித்தரமாக நம்புகின்றது. மேலும் இந்த டிக் டாக் செயலியை தடை செய்வது சீனாவிற்கு பதிலடி கொடுப்பதற்கான ஒரு வழியாக அமெரிக்கா கருதுகிறது.
இதைப் பற்றி நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீன நிறுவனத்தை தலைமையிடமாகக் கொண்ட டிக் டாக் செயலியை இந்தியா தடை செய்தது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகும், இதேபோல் நாங்களும் டிக் டாக் செயலியை தடை செய்ய உள்ளோம்.
சீனாவால் எங்கள் நாட்டுக்கு மட்டுமல்ல எல்லா நாடுகளுக்கும் மிகப் பெரும் பேரிழப்பு தற்போது ஏற்பட்டுள்ளது, சீனா செய்த இந்த செயல் மிகவும் அவமதிக்கத்தக்க ஒரு செயல். ஆகையால் நாங்களும் டிக் டாக் செயலியை தடை செய்ய உள்ளோம் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் தற்போது வரை 30- லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,30,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கடும் கோபத்தில் உள்ள அமெரிக்க அரசு தற்போது பெய்ஜிங் அரசை முடக்க டிக் டாக் செயலியை தடை செய்வதும் ஒரு வழியாக இருக்கும் என்று கருதுகிறது.
இந்த டிக் டாக் செயலியானது இளைஞர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த செயலியானது 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தகவலை பெற்றோரின் அனுமதி இல்லாமல் சேகரிக்கிறது என்று தெரியவந்துள்ளது .இது அமெரிக்க அரசின் ஆணைப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆனால் இதனை டிக்டாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மறுத்துள்ளார். நாங்கள் அப்படி எந்த தகவலையும் எடுப்பதில்லை, எங்கள் மீது இவ்வாறு பழி போடுவது சரியான விஷயம் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிக் டாக்கை தடை செய்வதில் மிகவும் உறுதியாக உள்ளார் என்று கருதப்படுகிறது.