வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு உள்ளதற்கான போதிய ஆதாரம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா பரவல் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு தான் முதலிடம்.
அமெரிக்காவை குறிவைத்தே கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, உகான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா பரவி இருக்கிறது என்பதற்கான ஆதாரம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ஆம், கொரோனா உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளதற்கான போதிய ஆதாரம் உள்ளது என்றார்.
இதையடுத்து, எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் என்று டிரம்பிடம் செய்தியாளர்கள் மீண்டும் வினா எழுப்பினர். அந்த விவரங்களை உடனடியாக வெளியிட முடியாது என்று டிரம்ப் கூறி பதிலளிக்க மறுத்து விட்டார். மேலும், இந்த விவகாரத்தில் சீனா மீது கடுமையான பொருளாதாரத்தடைகளை விதிக்க உள்ளதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.