டில்லி:

ப்பானில் நடைபெறும் ஜி.20 மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ  இன்று இந்தியா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு 14வது ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஒசாகாவில் வரும் 28, 29ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மறுதினம் ஜப்பான் செல்கிறார்.

இந்த மாநாட்டில் இந்தியா,  அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி,  இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் பிரதானமாக அமெரிக்காவின் வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில்  கலந்துகொண்ட பிரதமர் மோடி, உலக வர்த்தகம் தொடர்பாக , சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை சந்தித்து பேசி உள்ளனர். அதை தொடர்ந்து தற்போது ஜி-20 மாநாட்டின் இடையே 3 நாடுகளின் தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேச  உள்ளனர்.

அப்போது, சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது. 3 நாடுகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது, ராணுவ ரீதியான ஒத்துழைப்பு, சர்வதேச நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் இந்தியா, சீனா, ரஷியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியாக நெருக்கடி கொடுத்து வருகிறார். ஜி-20  மாநாட்டுக்கு வரும் டிரம்பை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக இன்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ டில்லி வருகை தந்துள்ளார். அவருடன் மோடி டிரம்ப் சந்திப்பின்போது பேச விரும்பும் அம்சங்கள் பற்றி இறுதி செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில்  இந்தியாவை அமெரிக்கா வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து விலக்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இரு தரப்பு வரி விதிப்பு பிரச்சினை, விசா விவகாரம், இரு தரப்பு ராணுவ, அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து மோடி டிரம்பிடம் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.