கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்க்ள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளனர்.
கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட போது கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது., ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
சந்தீப் கோஷிடம் நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாகவும் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.
கடந்த 13ம் தேதி சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சீல்டா நீதிமன்ரம் உத்தரவு பிறப்பித்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் சட்டப்படி 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாக கோர்ட்டு தெரிவித்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதால் 10 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக மேற்கு வங்க மருத்துவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.