உன்னாவ், உத்திரப் பிரதேசம்
உத்திரப் பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் 58 மக்கள் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றசாட்டில் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 21 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2010 ஆம் வருடத்தில் இருந்து புதிய எய்ட்ஸ் நோயாளிகள் 46% அதிகம் ஆகி உள்ளனர். இதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதுபோல வழக்கமான சோதனைகளில் கடந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூலை வரை உத்திரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாநிலத்தில் உள்ள பங்கார்மவு தாலுகாவில் புதியதாக 12 நோயாளிகள் கண்டறியப் பட்டுள்ளனர். அத்துடன் நவம்பரில் மேலும் 13 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு மேலும் சோதனை செய்து மேலும் 33 பேருக்கு எய்ட்ஸ் உள்ளதை கண்டறிந்துள்ளனர். அந்த 58 நோயாளிகளை விசாரித்ததில் அவர்கள் அனைவரும் ஒரு கற்றுக்குட்டி வைத்தியரான ராஜேந்திர யாதவ் என்பவரிடம் வேறு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதையொட்டி ராஜேந்திர யாதவை விசாரித்ததில் அவர் ஒரே ஊசியை பலருக்கு போட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் அந்தப் பகுதியில் உள்ள ஏழைமக்களை கவர ரூ. 10 மட்டுமே கட்டணம் வாங்கி உள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை விசாரித்து வருகின்றனர்.