கோயம்புத்தூர்

சிங்காநல்லூர் மருத்துவர் தன்னிடம் செவிலியர் பயிற்சிக்கு வந்த  மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் மருத்துவமனை நடத்தி வருபவர் ரவிந்திரன் (வயது 47).    பல மாவட்டங்களில் இருந்தும் செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவியர் இங்கு பயிற்சிக்கு வருவது வழக்கம்.    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் இங்கு பயிற்சிக்கு வந்துள்ளார்.   இவர் திண்டுக்கல்லில் உள்ள செவிலியர் பயிற்சி மையத்தில் இருந்து 10 மாணவிகளில் ஒருவராக அனுப்பப் பட்டுள்ளார்.

அந்த மாணவிக்கு சளித்தொல்லை அதிகமாக இருந்ததால் அவர் மருத்துவர் ரவீந்திரனிடம் மருந்து கேட்டுள்ளார்.   ரவீந்திரன் அவருக்கு ஊசி போட்டுள்ளார்.   அத்துடன் அந்த மாணவிக்கு ரத்த உற்பத்தி குறைவாக உள்ளதால் அதற்கு இன்னொரு ஊசி போடுவதாகக் கூறி மயக்க ஊசி போட்டுள்ளார்.   மாணவி அரைகுறை மயக்கத்தில் இருக்கையில் அவரிடம் ரவீந்திரன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

மயக்கத்துடனேயே அந்த மாணவி அங்கிருந்து ஓடி உள்ளார்.   ஆனால் சிறிது தூரம் சென்றதும் மருத்துவமனையின் உள்ளேயே மயங்கி விழுந்துள்ளார்.    சக மாணவிகள் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி உள்ளனர்.  அவர்களிடம் நடந்ததை மாணவி கூறவே அவர்கள் அங்கிருந்த ரவீந்திரன் மனைவியிடம் அதை புகார் அளித்துள்ளனர்.   அவர் இனி இது போல் நடக்காது என உறிதி அளித்துள்ளார்.

அப்போது உடன் இருந்து வேறு கல்லூரியை சேர்ந்த மாணவிகள் தங்களிடமும் ரவீந்திரன் அவ்வாறு நடந்துக் கொண்டதக கூறி உள்ளனர்.   அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் கோவை குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தெரிவித்தனர்.   அவர்கள் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ரவீந்திரனை கைது செய்துள்ளனர்.   அவர் மீது குழந்தைகல் மீதான பாலியல் வன்முறை குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.