2020 – இந்த ஆண்டு முழுவதும் கொரோனா வைரசுடன் போராடுவதிலேயே கழிந்துவிட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, இதற்கான தடுப்பூசி குறித்த பேச்சுகளும் அடிபடுகிறது.

இந்தியாவில் 20201-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தின் போதே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு சுகாதார அமைச்சரின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் எத்தனை பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்பது தெரியவில்லை என்றாலும், இந்த தடுப்பூசியை பாதுகாப்பது மற்றும் கையாளும் முறை குறித்து வரும் தகவல்களை அடுத்து, இந்தியாவில் இதற்கு தேவையான உலகட்டமைப்பு உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும், இந்தியாவின் மலைகிராமங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வசதியில்லாத தொலைதூர பகுதிகளுக்கு இதனை எப்படி கொண்டு சேர்ப்பது என்பது சவாலான பணியாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆண்டொன்றுக்கு 16 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் பேரிளம் குழந்தைகளுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணியை வழக்கமாக கொண்டிருக்கும் இந்தியாவில் இது மிகப்பெரிய சவாலாக இருக்காது என்றும் நம்பப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா குறித்து கிராமப்புற மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா என்பது குறித்து கோவன் கனெக்க்ஷன் என்ற தனியார் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது.

கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சில புள்ளிவிவரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது, அதில் :

51 சதவீத மக்கள் கொரோனா வைரஸ் நோய் சீனாவின் சதிச்செயல் என்று கூறுகின்றனர்.

முகக்கவசம் அணிவது இந்த நோய் பரவலை பெரிதும் கட்டுப்படுத்தியிருக்கிறது என்று 78 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அதை விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு :

நாடுமுழுக்க சராசரியாக 44 சதவீதம் பேர் கட்டணம் செலுத்த தயாராக இருந்த போதும். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் 33 சதவீத மக்களே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வடக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களில் 51 சதவீத மக்களும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் 47 சதவீதமும், மேற்கு மண்டலத்தில் 37 சதவீதமும், தெற்கு மண்டலத்தில் 33 சதவீத மக்களுக்கும் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இதற்கான கட்டணமாக 500 முதல் 2000 வரை எவ்வளவு நிர்ணயிக்கலாம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என்றும் கேட்டுள்ளது.

இந்த கேள்விகளால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டணம் நிர்ணயிக்கப்படுமோ என்றும், அதற்காக ஒரு குடும்பத்திற்கு எத்தனை ஆயிரங்கள் செலவாகுமோ என்று தெரியாமல் கலங்கி நிற்கின்றனர்.

இருந்த போதும், இந்த கணக்கெடுப்பு எதற்காக எடுக்கப்பட்டது என்ற விவரத்தை அந்த நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.