கொல்கத்தா:
மத்திய அரசு அறிவித்துள்ள மோடி கேர் சுகாதார திட்டம் தங்கள் மாநிலத்துக்கு தேவையில்லை என்றும், `மோடி கேர்’ திட்டத்திலிருந்து வெளியேறுவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கடந்த 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018-19ம் ஆண்டுக்கான பொது நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புதிய சுகாதார திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் என்ற அந்த திட்டத்திற்கு மோடி கேர் என்று பெயரிடப்பட்டும், அதன்படி நாடு முழுவதும் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீடு பெற முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின்கீழ் ஏழை, எளிய மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும் என்றும், இந்த தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்துக்கு (மோடி கேர்) ஆண்டொன்றுக்கு பதினோராயிரம் (11,000) கோடி ரூபாய் தேவைப்படும் என நிதி ஆயோக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் கணித்துள்ளன.
இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு, தனது பங்காக 40% மானியம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மோடி பெயரிலான இந்த திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநில அரசுகளின் நிதிநிலையை ஆராயாமல் மத்திய அரசே தன்னிச்சையாகத் திட்டங்களை அறிவித்து செலவு செய்யும்படி மாநில அரசை கட்டாயப்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், `மோடி கேர்’ திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, ‘எங்கள் மாநிலத்தில், மக்களுக்க தேவையான மற்றும் போதுமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் ஏற்கனவே உள்ளது என்றும், எங்கள் மாநிலம் அரும்பாடுபட்டு சேர்த்த வளங்களை, மோடி கேர் திட்டத்துக்காக `வீணடிக்க முடியாது’, நாங்கள் மோடி கேர் திட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்றும் கூறி உள்ளார்.
மோடி கேர் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து, அதிலிருந்து வெளியேறிய முதல் மாநிலம் மேற்கு வங்காளம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமெரிக்காவில், ஒபாமாக அதிபராக இருந்தபோது, ஒபாமா கேர் என்ற மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டு, அது தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.