சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என அலட்சியமாக இருக்க வேண்டாம் என திமுகவினருக்கு, கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி, தொகுதிப்பங்கீடுகள் குறித்து ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வர இருக்கும் தேர்தலில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டிருக்கும் திமுக, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே, அரசியல் சாணக்கியர் என கருதப்படும் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த, கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வெற்றிவாயப்பை இழந்த திமுக 2021 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை தவிர்த்து பிற மாவட்டங்கள் 4 மண்டலங்களாகவும், சென்னை தனி மண்டலமாகவும் பிரிக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்படுகிறது. ஏற்கனவே கடந்த 21ந்தேதி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுடன் ஸ்டாலின் உள்பட திமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதையடுத்து, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
இன்று தென்மண்டல திமுக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என திமுகவினர் அலட்சியமாக இருக்க வேண்டும், இப்போதிருந்த தீவிரமாக கட்சிப்பணியாற்றி வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இன்றைய கூட்டத்தில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, பொன்முடி, ராசா உள்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தொகுதி வாரியான பிரச்சனைகளை நிர்வாகிகள் படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வலியுறுத்தபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.