சிகாகோ :
ரெம்டெசிவிர் (Remdesivir) என்ற மருந்தை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பரிசோதித்து பார்த்ததில், பலர் சில நாட்களிலேயே விரைவாக குணமடைந்து வீடு திரும்புகின்றனர் என்ற தகவலை அமெரிக்க மருத்துவ இதழான ஸ்டாட்-டை (STAT) மேற்கோள்காட்டி சி.என்.என். செய்திநிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கடுமையான சுவாச அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் இருந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்ததில் ஒரு வாரத்திற்கும் குறைவான சிகிச்சைக்கு பின் அவர்கள் மருத்துவமனையை விட்டு வீடு செல்கிறார்கள், என்று சோதனைக்கு தலைமை தாங்கிய மருத்துவர் கூறியதாக செய்திவெளியிட்டிருக்கிறது.
“எங்கள் நோயாளிகளில் பெரும்பாலோர் ஏற்கனவே குணமடைந்து வெளியில் சென்றனர் என்பது மிகச் சிறந்த செய்தி. இரண்டு நோயாளிகளை மட்டுமே எங்களால் காப்பாற்ற முடியவில்லை” என்று மருத்துவ பரிசோதனைக்கு தலைமை தாங்கும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் கேத்லீன் முல்லேன், வீடியோ பதிவு ஒன்றில் கூறினார்.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை, இது சில நோயாளிகளுக்கு கடுமையான நிமோனியா மற்றும் கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறியை ஏற்படுத்தும். அதனால், தேசிய சுகாதார நிறுவனம், பல்வேறு மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறது, அதில் ரெம்டெசிவிர் மருந்தும் ஒன்று.
கிலியட் சயின்ஸ் (Gilead Sciences) எனும் நிறுவனம் தயாரித்த இந்த மருந்து எபோலா-வுக்கு (Ebola) எதிராக பயன்படுத்த பட்டு சிறந்த பலனை தந்தது. அதனடிப்படையில், விலங்குகளில் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டு, கோவிட்-19 தொடர்பான வைரஸ்களைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியும் என்பதை உறுதிப்படுத்தியது, இதில் SARS மற்றும் MERS ஆகியவையும் அடங்கும்.
உலக சுகாதார நிறுவனம், கடந்த பிப்ரவரியில், ரெம்டெசிவிர் கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கூறியது.
இது குறித்து டாக்டர். முல்லேன் கடந்த வாரம் சக ஊழியர்களுடன் நடத்திய விவாதத்தின் வீடியோவை பார்த்ததாக கூறும் ஸ்டாட் மருத்துவ செய்தி நிறுவனம், அதில், “எங்கள் நோயாளிகளில் பெரும்பாலோர் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் பெரும்பாலோர் ஆறு நாட்களில் குணமடைந்து வருகிறார்கள், இதனால் அவர்கள் சிகிச்சையின் காலம் 10 நாட்களில் இருந்து வெகுவாக குறைந்துள்ளது ” என்று அவர் அந்த வீடியோவில் கூறியதை மேற்கோள்காட்டுகிறது.
இதுகுறித்து, சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு டாக்டர் கேத்லீன் முல்லேன் உடனடியாக பதிலளிக்கவில்லை. பரிசோதனையின் அதிகாரபூர்வ முடிவுகள் வந்ததும் கருத்து தெரிவிப்பதாக சிகாகோ பல்கலைக்கழகமும் தெரிவித்திருக்கிறது.
இருப்பினும், இந்த மருத்துவ சிகிச்சை சிறந்த மருத்துவர்களின் மேற்பார்வை குழுவால் கண்காணிக்கப்படுவதாக தெரியவில்லை, எனவே இந்த மருந்து நோயாளிகளுக்கு சிறப்பாக குணமடைய உதவுகிறதா என்று சொல்வது கடினம். மருத்துவ கண்காணிப்பு குழுவால் இந்த சிகிச்சை கண்காணிக்கப்படும் போது தான் இந்த மருந்து உண்மையில் சிறந்த பலனை தருகிறதா என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்க முடியும்.
உலகெங்கிலும் உள்ள 152 சோதனை மையங்களில் கடுமையான கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் உள்ள 2,400 நோயாளிகளுக்கு கிலியட் நிறுவனம் மருத்துவ பரிசோதனைகளை வழங்கிவருகிறது. மேலும், உலகெங்கிலும் உள்ள 169 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் மிதமான அறிகுறிகளுடன் உள்ள 1,600 நோயாளிகளையும் இந்த நிறுவனம் பரிசோதிக்கிறது. மருந்துகளின் சோதனைகள் பனிரெண்டிருக்கும் மேற்பட்ட பிற மருத்துவ மையங்களிலும் நடந்து வருகின்றன.
இந்த மாத இறுதிக்குள் பரிசோதனையின் முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்று கிலியட் நிறுவனம் கூறிவருகிறது.
“கொரோனா வைரஸ் சிகிச்சையின் அவசரத் தேவையையும், அதன் விளைவாக வைரஸ் தடுப்பு மருந்து ரெமெடிசிவிர் குறித்த எங்கள் பரிசோதனையின் தரவுகளை அறிய விரும்பும் ஆர்வத்தையும், நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று கிலியட் நிறுவனம் சி.என்.என்-க்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே சமயம் அந்த அறிக்கையில் “சோதனையிலிருந்து எந்தவொரு முடிவுகளையும் எடுக்க தரவுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள குறிப்பறிக்கைகள், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்தாக ரெம்டெசிவிரை தீர்மானிக்க தேவையான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த புள்ளிவிவரம் இதுவரை கிடைக்கவில்லை,” என்று கிலியட் நிறுவனம் கூறியிருப்பது சந்தேகத்திற்கிடமாக இருக்கிறது.