பாஜக அரசை அதானி இயக்குகிறாரா அல்லது அதானி குறித்து பேச அரசாங்கம் பயப்படுகிறதா ? என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார்.
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு மறுத்து வருவதை அடுத்து 5வது நாளாக இன்றும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் 5 பிரிவுகளில் 3 பிரிவுகளில் மட்டுமே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி ஆஜராக உள்ள நிலையில் இந்திய சந்தையில் அதானியின் பங்குகள் பெருமளவு சரிந்து வருகிறது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது, இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி “அரசு ஏன் இவ்வளவு பயப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை. இந்த அரசை அதானி இயக்குகிறாரா அல்லது அரசாங்கம் பயப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “நேற்றும் சபை ஒத்திவைக்கப்பட்டது, இவ்வளவு நேரம் இருக்கும்போது ஏன் விவாதம் நடத்த முடியாது?” என்று தெரிவித்துள்ளார்.