சென்னை

திமுகவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட விபி துரைசாமி இன்று காலை பாஜகவில் இணைகிறார்.

திமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த வி பி துரைசாமி துணை சபாநாயகர் பதவியில் இருந்தவர் ஆவார்.   கடந்த சில நாட்களாக அவர் திமுக தலைமையுடன் அதிருப்தியில்  உள்ளதாகத் தகவல்கள் வெளி வந்தனர்.  இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் முருகனை துரைசாமி சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின.

அதையொட்டி துரைசாமி தாம் பாஜக தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் தாம் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே சமுதாயத்தினர் எனவும் தெரிவித்தார்.    சந்திப்புக்குப் பிறகு அவர் தனது மொபலை சுவிட்ச் ஆஃப் செய்தது மேலும் பல ஊகங்களை எழுப்பியது.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து  துரைசாமி அளித்த விமர்சனம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   நேற்று தி மு க தலைவர் வெளியிட்ட அறிவிப்பில் திமுக துணை பொதுச் செயலர் பதவியில் இருந்து வி பி துரைசாமி நீக்கப்பட்டு அந்த பதவியை அந்தியூர் செல்வராஜுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வி பி துரைசாமி இன்று காலை தாம் பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.  மேலும் அவர் தம்மை திமுகவின் அடிமட்ட தொண்டன் என்னும் பொறுப்பில் இருந்து விலக்குமாறு தலைமைக்குக் கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.