சென்னை: நடிகர் அஜித்து நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் அஜித் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’ கேக் வெட்டி, படத்தை கண்டு ரசித்தார். இது பேசும்பொருளாக மாறி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி, 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமைப்போம் என அறை கூவல் விடுத்துள்ளதுடன், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. நேற்றுகூட நீட் விலக்கு தொடர்பாக திமுக மாணவர்களிடத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இன்று நடிகர் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி தூத்துக்குடி திரையரங்கிலும் இன்று படம் வெளியாகி உள்ளது. அதையடுத்து திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இந்த நிலையில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகி உள்ள தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கம் சென்ற அமைச்சர் கீதா ஜீவன், அங்கு கூடியிருந்த அஜித் ரசிகர்களிடையே கலந்துரையாடினார். மேலும், அமைச்சருடன் அஜித் ரசிகர்கள் மற்றும் திரையரங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த ‘குட் பேட் அக்லி’ பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டி, அதை அஜித் ரசிகர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். தொடர்ந்து அந்த திரையரங்கில், அஜித் ரசிகர்களுடன் இணைந்து படத்தை கண்டு ரசித்தார்.

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜக கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தர உள்ளார். இன்று இரவு அதிமுக உள்பட கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்-ன் அரசியலுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில், சமீப காலமாக நடிகர் அஜித்தை திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், துணைமுதல்வர் உதயநிதி உள்பட பலர் பாராட்டி வருகின்றனர். இந்த அஜித் ரசிகர்களுடன் அமைச்சர் கீதா ஜீவன் ‘குட் பேட் அக்லி’ படத்துடன் கொண்டாடி உள்ளது, விஜய்க்கு எதிரானதிமுகவின் அரசியல் ஆட்டமாக கருதப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அஜித் ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்கான திமுகவின் யுக்தி இது எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.