சென்னை; நகை திருட்டு வழக்கில், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி,   “திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்” திமுக ஆட்சி நடைபெகிறது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

நகைத் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறி உள்ளார்.

இதுகுறித்து,  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 சவரன் நகை திருட்டு வழக்கில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

“திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்” திமுக கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என்று தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் அரசு காக்கத் தவறுவதும், குற்றச்செயல்களில் திமுக-வினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

ஏற்கனவே இந்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது பல வழக்குகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன. திருட்டு, கொள்ளை எல்லாம் தெரிந்திருந்தால் தானே அரசுப் பொறுப்புகளுக்கு வந்து, திமுக-வின் கொள்கையான கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷனை முறையாக செயல்படுத்த முடியும்? இப்படிப்பட்டவர்களைக் கொண்டிருக்கும் கட்சி நடத்தும் ஆட்சி இனியும் தேவையா? என்ற கேள்விக்கு நான் செல்லும் தொகுதிகளில் எல்லாம் மக்கள் சொல்லும் பதில்- “இல்லை”!

நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான நிரந்தர தீர்வு- #ByeByeStalin! என்று பதிவிட்டுள்ளார்.