பெருந்தலைவர் காமராஜர் குறித்து தான் பேசிய கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியதை அடுத்து என் வருத்தத்தினை மனதார தெரிவித்துக்கொள்கிறேன் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் (12-10-2024) சென்னையில் நடைபெற்ற “கர்மவீரர் காமராஜரும் முத்தமிழறிஞர் கலைஞரும்”என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் கர்ம வீரர் காமராஜர் குறித்து ராஜிவ் காந்தி கூறிய கருத்து சர்ச்சையானது.
இதனையடுத்து இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி விமர்சித்து வந்த நிலையில் இது கூட்டணி கட்சிகளுக்குள் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜிவ் காந்தி, “பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்த நான் பேசியது காங்கிரஸ் பேரியக்க தோழர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது!!
பெருந்தலைவர் காமராஜரை சிறுமைபடுத்தவோ,குறைத்து பேசவோ தனிப்பட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை!
பெருந்தலைவர் காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து.
என் பேச்சினை வைத்து இந்தியா கூட்டணிக்குள் உரசல் என விசம பிரச்சாரம் செய்து மதபாசிச கும்பலும், அடிமை அதிமுகவும் குளிர் காய விரும்புகிறது அதற்கு ஒருபோதும் என் பேச்சு இடம் தராது.
நான் பேசியதன் மூலம் மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பெரும் தலைவர் காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தினை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்!!” என்று பதிவிட்டுள்ளார்.