சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை கண்டித்து, திமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சியினருடன் இணைந்து கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
அதன்படி இன்று தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் 8ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற உள்ளது. சென்னை கொளத்தூரில் இயக்கத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின், வீதி வீதியாகச் சென்று மக்களிடம் கையெழுத்து பெற்றார்.
தோழமை கட்சிகளின் தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கடை வீதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கையெழுத்து முகாம்கள் அமைக்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து பெறப்பட்டு அவை அனைத்தும் பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.