சென்னை: வங்கி அதிகாரிகள் பணித் தேர்வில் முன்னேறிய பிரிவுக்கு 10% இட ஒதுக்கீட்டை பிரித்து தருவது சட்டவிரோதம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்திற்கு, மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டினை பின்னப்படுத்தி, சிதைத்தெடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருக்கும் மத்திய பாஜக அரசின் அராஜக, சட்ட விரோதப் போக்கிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, யூகோ வங்கி ஆகியவற்றிற்கு வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வில், இடஒதுக்கீடு என்னும் பெயரில் இப்படியொரு மோசடியை, வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியிருக்கிறது. சமூகநீதியைக் கிள்ளுக்கீரையை விடக் கீழானதாக நினைத்துப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்குத் தொடர்ந்து மத்திய அரசு கேடு விளைவித்து வருவதும், இடஒதுக்கீடு உரிமை படைத்த பெரும்பான்மை மக்களை எள்ளி நகையாடி வருவதும் மிகுந்த வேதனையளிக்கிறது.
தற்போதையை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவன இடஒதுக்கீடு மோசடியைப் பொறுத்தவரை, “முதல் நிலைத்தேர்வு”மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்னும் முதன்மைத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறவில்லை.
ஆகவே உடனடியாக மத்திய பாஜக அரசு தலையிட்டு – 49.5 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பிய்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தின் முதன் நிலை தேர்வை ரத்து செய்து – புதிய தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்கு உள்ள 49.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதகமும் விளைவிக்காத வகையில் புதிய பணியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப்பிரதிநிதி என்று கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டினை, திட்டமிட்டுப் புறக்கணித்து – மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுவதுமாக செயல்படுத்தாமல் – சமூகநீதியை சீர்குலைத்து வருவது வருத்தமளிக்கிறது.
நாட்டின் பெரும்பான்மையான சமுதாயத்தின் சமூக நீதி உரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும், சமூகநீதியின் மீது அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று மத்திய பாஜக. அரசுக்கு எச்சரிக்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.