டெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள  நிலையில், முதல்நாளே கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை அதிரடியாக எழுப்பிய நிலையில், திமுக தரப்பில், பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு,  காஷ்மீர் தலைவர்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தார்.

20அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பாஜக அரசு பல்வேறு சட்டதிருத்தங்களை நிறைவேற்ற தயாராகி வருகிறது.

முதல்நாள் கூட்டமான இன்று, தமிழகத்தின் சார்பாக திமுக எம்.பி.க்கள் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.  கனிமொழி எம்.பி., தற்கொலை செய்துகொண்ட  ஐஐடி மாணவி பாத்திமா குறித்து ஆவேசமாக குரல் எழுப்பிய நிலையில், திமுக மூத்த எம்.பி.யான டி.ஆர்.பாலு காஷ்மீர் தலைவர்களுக்காக குரல் கொடுத்தார்.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும்,  ஃபரூக் அப்துல்லாவை பாராளுமன்றத் தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரியும்,  மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு  குரல் எழுப்பினார்.

ஃபரூக் அப்துல்லா சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டிய டி.ஆர்.பாலு,  அவரின் விடுதலையை உறுதி செய்ய வேண்டியது மக்களவை சபாநாயகரின் கடமை என்றும், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான  மெகபூபா முப்தியை, அவரது மகளே சந்திக்க முடியாதவாறு அடைத்து வைத்திருப்பது மோசமான செயல் எனவும் பாலு வருத்தம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,  காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை வீட்டு சிறையில் இருந்து விடுவித்து அவையில் பங்கேற்க வைக்குமாறு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.