சென்னை: சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’ என விமர்சனம் செய்த திமுக எம்.பி. ராஜா பேசியது தவறானது, அதை திருமப பெற வேண்டும, சிபிஐ (எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யுனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
திமுக கூட்டணி கட்சியான சிபிஐ(எம்) கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக அரசின் சமீப நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுகிறது என உச்சபட்சமாக விமர்சனம் செய்திருந்தார். இது திமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பாலகிருஷ்ணன் தனது பதவி காலம் முடிந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சிபிஐ கட்சி கூட்டத்தில், புதிய செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய திமுக எம்பி ஆ. ராசா, ” கம்யூனிசம் செம்மையானது. ஆனால், அதை முன்னெடுத்த தலைவர்கள் நீர்த்துவிட்டதால், சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால், கம்யூனிச தத்துவங்களும் நீர்த்துவிட்டது” என விமர்சனம் செய்திருந்தார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது, இதற்கு எதிர்வினையாற்றியுள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகள் என்று அடிப்படை தன்மை இல்லாமல் பேசியதை ஆ. ராசா திரும்ப பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு மட்டும்தான். ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம் என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கம்யூ தலைவர்கள் குறித்து ராஜா பேசியது தவறானது, ‘கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகள்’ என திமுக எம்.பி. ஆ. ராசா பேசியதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
அதுபோல, ‘சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’ என்று ஆ.ராசா எம்பி பேசியதை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “திமுக துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் முதன்முறையாக சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டம், போராடும் உரிமையை வழங்கியுள்ளது. யார் போராட அனுமதி கோரினாலும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தை அவர்கள் ஒழுங்குபடுத்தலாம். போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதமாகும். தமிழக காவல்துறை இத்தகைய போக்கைத்தான் கொண்டுள்ளது. காவல்துறையின் இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
மக்கள் நலனுக்கு எதிரான முடிவை அரசு எடுத்தால் நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம். சாம்சங் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. இது, தொழிலாளர் விரோதப் போக்குதான்.
திமுக முதலாளித்துவ கட்சி. எங்கள் கட்சி தொழிலாளர்கள் நலன் சார்ந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி உடன்பாடு மட்டும்தான். ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்கமாட்டோம்.
தமிழக சட்டப்பேரவை மரபு குறித்து அரசும், சபாநாயகரும் விளக்கம் அளித்த பிறகும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார். போட்டி அரசு நடத்தும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
திமுக அரசு 3 ஆண்டுகளில் அவர்கள் அறிவித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளனர். ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு குவிண்டாலுக்கு ரூ.4,000 என்பன உள்ளிட்டவற்றையும் நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற வாக்குறுதிகள் 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், திமுக அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும்.
1949-ம் ஆண்டு முதல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளன. அவற்றில் இருந்து வீடற்றவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். இதுதொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். நீதிமன்ற உத்தரவு, அரசாணைகள் இருந்தும் பட்டியலினத்தவர்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மீட்கப்படவில்லை. இவற்றை மீட்க அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
திமுக எம்.பி. ஆ.ராசா, தனிப்பட்ட முறையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்புடையதல்ல. அவை தவறானவை, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகும். இவ்வாறு சண்முகம் தெரிவித்தார். பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர், முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் நேற்று (07.01.2025) நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். கம்யூனிஸ்டு தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது என்ற அவதூறுச் செய்தியை ஆதாரமாக காட்டுகிறார்.
கடந்த 1989-90 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு ஆட்சி வீழ்ந்ததும், இதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகளாகும். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், இதர கம்யூனிஸ்டு கட்சிகளும் விரிவான ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளன. இவைகளை ஆ.ராசா சார்பு நிலை தவிர்த்து கற்றறிந்து பேச வேண்டும்.
“கம்யூனிசம் பிறந்த இடத்திலேயே செத்து விட்டது” “முதலாளித்துவத்துக்கு மாற்று இல்லை” என்று தத்துவ எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில், கருணாநிதி “சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல; அது தற்காலிக பின்னடைவு மட்டுமே” என்று கூறியதை ஆ.ராசா தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கம்யூனிஸ்டுகளின் நேர்மையை, எளிமையை, தன்னல மறுப்பை, பொதுநல வேட்கையை, போராட்ட குணத்தை வர்க்க எதிரிகளும் ஒப்புக் கொள்வதை நாடறியும் என்பதை ஆ.ராசாவும் அறிந்திருக்க வேண்டும். போகிற போக்கில் “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டும் ஆ.ராசா, அவர் கண்டறிந்த கம்யூனிஸ்டு சுயநலவாதிகள் பட்டியலை வெளியிட வேண்டும்.
கம்யூனிசம் என்பது வறட்டு தத்துவம் அல்ல, அது மனித குலம் நிறைவாக, நீடித்த அமைதியும், நிரந்தர சமாதானமும் நிலவும் முற்றிலும் புதுமையான சமூக அமைப்பில் வாழும் வாழ்க்கை முறை பற்றிய சமூக விஞ்ஞானம்.
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு தான் மனிதகுல வரலாறாகும். இதில் இயற்கை நிலை சமூகம் படிப்படியாக மாறி இன்று நிதி மூலதனமும், குழும நிறுவனங்களுமாக ஆதிக்கம் செலுத்தும் உச்சபட்ச ஏகாதிபத்திய சமுக அமைப்பாக வளர்ந்து, மீள முடியாத நெருக்கடியில் சிக்கி, சாவில் இருந்து தப்பித்துக் கொள்ள துடிக்கும் நோயாளியாக தவித்து வருகிறது.
சமூக நோயை குணப்படுத்தும் கம்யூனிசம் வெல்லும் எனும் காட்சியை ஆ.ராசாவும் காணும் காலம் வரும்.
உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் பட்டியலின சமூகத்தில் இருந்து தலைவர்களை உருவாக்கி, நாடறிய உயர்த்தி பிடித்த கம்யூனிஸ்டுகள் மீது, இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி தேடி, தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் குற்றம் சாட்டுவது பொறுப்பற்ற செயலாகும்.
இதில் திமுகழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவது உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க.” என்று கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்