டெல்லி

நேற்று திடீரென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம் பி கனிமொழி சந்தித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் மத்திய அரசின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில், தமிழகத்திற்கு என சிறப்பு திட்டங்கள் எதுவுமில்லை என்பதாலும் தமிழகத்தின் பெயர் கூட இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதில் குறிப்பாக தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய கனிமொழி, தங்களுக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

நேற்று டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, தி.மு.க. எம்.பி., கனிமொழி நாடாளுமன்ற வளாகத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பிரச்சினை தொடர்பாக இருவரும் விவாதித்தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்திற்கான கோரிக்கைகளையும் கனிமொழி முன்வைத்ததாக கூறப்படுகிறது.

கனிமொழி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இது குறித்து,

“மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். தமிழகம் மற்றும் எனது தொகுதியான தூத்துக்குடி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தேன்”

என்று பதிந்துள்ளார்.