சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் மத்தியஅரசு, 15 நாள் இடைவெளிக்குள் இருமுறை கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் உயர்த்தி உள்ளது. இது இல்லத்தரசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி (மகிளா காங்கிரஸ்) சார்பில் நேற்று (20ந்தேதி) நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், திமுக மகளிர்அணி சார்பில் இன்று (திங்கட்கிழமை) மாலை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கூறிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 15 நாள் இடைவெளிக்குள் இருமுறை கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder Prices Hiked) விலையை 100 ரூபாய் மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியிருப்பதும், தொடர்ச்சியாக அதன் விலையை உயர்த்தி வருவதும், இந்தியக் குடும்பங்களின் “குடும்ப வரவு செலவுக் கணக்கில்” கடும் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா (COVID-19) கொடுங் காலத்தில், பெரும்பாலான குடும்பங்களில், யாராவது ஒருவர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. பல குடும்பங்களில் குடும்பத் தலைவரே வேலை வாய்ப்பைப் பறிகொடுத்து, பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டு நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் எல்லாம் இதுவரை சந்தித்திராத வருமான இழப்பையும் சரிவையும் இந்த கொரோனா காலத்தில் சந்தித்துள்ளன என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் குறித்து டிவிட்பதிவிட்டுள்ள கனிமொழி, கழகத் தலைவர் தளபதி அவர்கள்,சிலிண்டர் விலையை 100 ரூபாய் உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்து மகளிரணி சார்பில் 21.12.2020,திங்களன்று மாலை 3.30 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்தில் மகளிர் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அழைப்பு விடுத்துள்ளார்.