சென்னை :
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழலை அடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களை உடனடியாக சென்னைக்கு வர திமுக தலைமை கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மையாக இருக்கும் திமுக, அதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாக என்ற தகவல்கள் உலா வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளதால், தமிழகத்தில் அரசியல் நெருக்கடி மேலும் வலுவடைந்து உள்ளது.
அதிமுகவின் இரு பிரிவினரும் தனக்கே ஆதரவு என போர்க்கொடி தூக்கி வருவதால், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை11 மணிக்குள் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிடப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து தற்போது கோவையில் இருக்கும் திமுக செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் சென்னை திரும்பி வந்துகொண்டு இருக்கிறார்.
சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது.
தற்போது தி.மு.க.,விடம், 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதிமுகவுக்கு அடுத்த நிலையில் திமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க பெரும்பா லான எம்எல்ஏக்கள் விரும்பாத நிலையில், திமுக ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.