திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமியை,  திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா சந்தித்து மனு அளித்தார்.

இன்று காலை  திருவாரூர் மாவட்டம் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி, அங்கு மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது,  ஆய்வு கூட்டத்திற்கு மன்னார்குடி தொகுதி  திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா வருகை புரிந்தார்.

அரசு நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவுக்கு அழைப்பிதழ் வழங்காமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க வந்தார். சுமார் இரண்டு மணி நேரமாக காத்திருந்த நிலை யில், அவருக்கு முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முதல்வரை சந்தித்தவர்,  தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து மனு அளித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அவர் அளித்த  மனுவில்,  பாதாள சாக்கடை திட்டம் , நீடாமங்கலம் ரயில்வே மேம்பால பணி உள்பட பல்வேறு பணிகள் குறித்தும், அதை உடனே நிறைவேற்றித்தரக்கோரியும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே  தர்மபுரியில் முதல்வர் பழனிசாமியை  சந்திக்க வந்த திமுக எம்பி செந்தில்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில்,  திருவாரூரில் திமுக பிரதிநிதிக்கு அனுமதி அளிக்கப்பட் டது குறிப்பிடத்தக்கது.