சென்னை: தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், ஜனவரி 10ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 9 தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார். இந்தாண்டின் கூட்டத்தொடர் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என கூறினார்.
காலை 9:55 மணிக்கு ஆளுநர் ரவியை சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் வரவேற்றபின் சபாநாயகர் இருக்கையில் அமரும் ஆளுநர் தனது உரையை தொடங்குவார்.  தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு ஆளுநர் ரவி உரை நிகழ்த்தவார் என்றும், அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தவுடன் அன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவடையும்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தினை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த நிலையில்,  திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளாா்.  அதன்படி,  தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப் பேரவை உறுப்பினா்களின் கூட்டம், வரும் 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.