சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழலை மறைக்க திமுக மொழியை வைத்து அரசியல் செய்கிறது என மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
தமிழ்நாடு அரசு, மும்மொழி கொள்ளை விவகாரத்தில், இந்தி திணிக்க முயற்சிப்பதாக மத்தியஅரசை குற்றம் சாட்டி வருவதுடன், மற்றொருபுறம் இஸ்லாமி யர்கள் உருது கற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. திமுக அரசின் இரட்டை வேடம், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தொகுதி மறுசீரமைப்பு குறித்து, பேசி, அதை பெரும் பிரச்சினையாக்கி அரசியல் செய்து வருகிறது. இதற்கிடையில் டாஸ்மாக்கில் எழுந்துள்ள ரூ.1000 கோடி ஊழல் உள்பட பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதும், தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதை கலாச்சாரம், கொலை போன்றவற்றை மறைக்கும் வகையில், அதை மடைமாற்றவே தொகுதி சீரமைப்பு, இந்தி திணிப்பு குறித்து பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில், மாநிலங்களவையில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பயங்கரவாதத்துக்கு உடனுக்குடன் முடிவு கட்டப்படுவதாகக் கூறினார். பாஜக ஆட்சியில் உரி மற்றும் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் அமித்ஷா, வெறும் 10 நாளில் பாகிஸ்தானுக்குள்ளேயே நுழைந்து இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் மூலம் தக்க பதிலடி கொடுத்ததாகப் பெருமிதம் தெரிவித்தார்.
முதலில், நான் காஷ்மீரைப் பற்றிப் பேசுகிறேன். அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்தனர். அவர்கள் இங்கு குண்டுவெடிப்பு களையும் கொலைகளையும் அரங்கேற்றினர். எந்த கவலையும் இல்லாமல் ஒரு பண்டிகையைக் கூட காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியவில்லை. இந்த விவகாரத்தில் முந்தைய மத்திய அரசு நெகிழ்வான அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அவர்கள் அமைதியாக இருந்தனர், பேசுவதற்கு பயந்தனர். அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் காட்டினோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல்கள் நடந்தன. 10 நாட்களுக்குள், நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம். எங்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அங்கிருந்து தொடங்கியது. காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கான அடிப்படையாக பிரிவு 370 இருந்தது. ஆனால் பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று எங்கள் அரசால் நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதை உறுதி செய்தது.
தற்போதைய நிர்வாகம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எந்தவொரு அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்த உயர்ந்த தியாகத்தைச் செய்த ஆயிரக்கணக்கான மாநில காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படை வீரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பேசிய அமித்ஷா “தான் பயங்கரவாதிகளை தூரத்திலிருந்து கூட பார்க்கிறேன்” என்று ஒருவர் (ராகுல் காந்தி காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரை யின்போது) கூறினார். பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள் என்று விமர்சித்தார்.
மேலும் நக்சல் பிரச்சனை குறித்து பேசிய அமித் ஷா, இடதுசாரி பயங்கரவாதம், மார்ச் 31, 2026க்குள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார். போதைப்பொருள், சைபர் குற்றம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் ஹவாலா போன்ற மாநிலங்களுக்கிடையேயான மற்றும் வெளிநாட்டில் இருந்து நடக்கும் குற்றங்களை தடுக்க உள்துறை அமைச்சகத்தில் (அதிகார வரம்பில்) பல மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர்,
ஊழலை மறைப்பதற்காக மொழியை வைத்து திமுக அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டினார். மும்மொழிக் கொள்கை தொடர்பாக திமுக அரசு மக்களிடையே விஷத்தைப் பரப்புவதாக விமர்சித்த அவர், மொழியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த திமுக முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அனைத்து மொழிகளுமே இந்தியத் திருநாட்டின் பொக்கிஷம் தான் என்றும் அவர் தெரிவித்தார். தாங்கள் தென்மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்க திமுக அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டிய அமித்ஷா, தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்த திமுக அரசுக்குத் தைரியம் இல்லை எனவும் விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் மருத்துவம், பொறியியல் கல்வி தமிழில் கற்பிக்கப்படும் என்றும் அமித்ஷா உறுதியளித்தார்.