சென்னை: திமுக உட்கட்சி தேர்தல் ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 3ந்தி மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. முன்னதாக இன்று, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை , துணைகுடியரசு தலைவர் வெங்கையாநாயுடுவால் திறந்து வைக்கப்படுகிறது.
இதையொட்டி, இன்று காலை திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தல் கூட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளது. திராவிட மாடல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 2024 நெருங்கிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், பழைய வெற்றியைத் திரும்ப பெற வேண்டும் என்கிற அடிப்படையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஊடகங்கள் அண்ணாமலைக்கு பிடித்த செய்திகளை மட்டும் வெளியிட வேண்டும் என விரும்புகிறார் என்று விமர்சித்தவர், அண்ணாமலை நிறைய பேசுகிறார், ஆனால் எதையும் செய்ய வில்லை என்றும், கடந்த முறை தேர்தலின் போது, இதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் பதவி விலகுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார், ஆனால் அதன் பிறகு பத்து ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது என அவர் இன்னும் பதவி விலகவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி, பிரதமர் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியை முதல்வர் எப்படி தவிர்க்க முடியும் என்றும், மாநிலத்தின் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் துவக்கி வைக்க வரும்பொழுது அங்கே முதலமைச்சர் இருப்பதுதான் முறை, நாகரீகம் என்று தெரிவித்தார். பிரதமர் சென்னை வரும்போது அண்ணாமலை போட்டு வைத்த திட்டமெல்லாம் தோல்வி அடைந்து விட்டது என்பதாலும், விழா மேடையில் பிரதமரிடம் வைத்த கோரிக்கைகளில் முதலமைச்சர் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை அண்ணாமலையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் இவ்வாறு பேசி வருகிறார் என்றார்.
அப்போது செய்தியாளர்கள், விரோத சக்திகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, இந்த நாட்டில் ஒற்றுமையை குலைக்கக்கூடிய சக்திகள், மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் சக்திகளை தான் தேச விரோத சக்திகள் என்று குறிப்பிட்டுள்ளோம் என்று டி.கே.எஸ். கூறினார்.
திமுக உள்கட்சிதேர்தல் தொடர்பான கேள்விக்கு, ஒரு மாதத்திற்குள்ளாக உட்கட்சித் தேர்தல் முடிவுற்று பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த பின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.