சென்னை: திமுக ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சவுக்கு சங்கரின்  ‘சவுக்கு மீடியா  மூடப்படுவதாக சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார்.  அவர்மீதான தொடர் தொக்குதல், வங்கி கணக்குகள் முடக்கம் போன்ற காரணங்களால், அவர் தனது மீடியாவை மூடுவதாக அறிவித்துள்ளார்.

திமுக அரசின் ஊழல்கள், மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் குறித்து விமர்சனம், காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என பல தரப்பையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் சவுக்கு சங்கர். இதனால், கோபத்தில் இருந்து வரும் திமுக அரசு, அவரை முடக்க பல வழிகளை கையாண்டது. அவர்மீது பெண் போலீசை கொண்ட வழக்கு பதிந்து கைது செய்ததுடன், மாநிலம் முழுவதும் ஏராளமான வழக்குகளை பதிவு செய்ததுடன், கஞ்சா வழக்கிலும் அவரை கைது செய்தது.  பின்னர் குண்டாசிலும் கைது செய்தது. அவரது சவுக்கு மீடியா அலுவலகம் மற்றும் வங்கி கணக்குகளையும் முடக்கியது. ஆனால், உச்சநீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கியது.

ஜாமினில் வெளிவந்த சவுக்கு சங்கர் மீண்டும் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஊடங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வந்தனர். இதனால், அவர்மீது ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தூய்மை பணியாளர்கள் வாகன ஒப்பந்த முறைகேடு குறித்து அவர் பேசியிருந்ததும், அதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையை குற்றம் சாட்டியிருந்த நிலையில், நேற்று அவரது வீடு தாக்கப்பட்டது.

நேற்று (மார்ச் 24ந்தேதி) கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் அத்துமீறி சென்ற தூய்மை பணியாளர்கள்   அவரது தாயை மிரட்டியதுடன்,   அவரது வீட்டையும், சேதப்படுத்தியதுடன், கழிவுநீரை ஊற்றி அசிக்கப்படுத்திய விவகாரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தந்தையில்லாமல் என்னை வளர்த்த என தாயின் உயிரை பணையம் வைக்க முடியாது என கூறிய  சவுக்கு சங்கர்,  ‘சவுக்கு மீடியாவை மூடுகிறேன் என அறிவித்து உள்ளார். ‘என் தாயின் உயிரை பணையம் வைத்து ஊடகம் நடத்த தயாராக இல்லை’ என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று சவுக்கு மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘இது தான் எங்களின் கடைசி வீடியோ’ என்றும், அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.,

‘‘கடுமையான சூழலில் நான் இந்த சேனலை நடத்தி வருகிறேன். முந்தைய வழக்குகளில் என் வங்கி கணக்குகள் மூடக்கப்பட்டுள்ளது. என்வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள அலுவலகத்தை காலி செய்ய அழுத்தம் தரப்படுகிறது. வீடு கிடைக்காமல் இப்போதுதான் 3 மாதத்திற்கு முன் வாடகை வீட்டிற்கு வந்தேன்.

ஆனால், என் வீட்டில்  இன்று (மார்ச் 24ந்தேதி) நடந்த சம்பவத்தால், இப்போது இருக்கும் வீட்டையும் 10 நாட்களில் காலி பண்ணிச் சொல்லிவிட்டார்கள். என் அம்மா, எங்களை கடும் சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்தவர். சிறுவயதில் என் அப்பா இறந்துவிட்டார். என்னையும் என் தங்கையையும் வளர்க்க, அவர் பட்ட சிரமங்கள் எனக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு மாவு ஆட்டிக் கொடுத்து, எங்களை வளர்த்தார். இன்று வயதானவர்களுக்கு இருக்கும் பல சிரமங்கள், அவருக்கும் இருக்கிறது.

என் தாயின் உயிரை பணையம் வைத்து நான் ஏன் சேனல் நடத்த வேண்டும்?, இந்த சம்பவத்தின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையும், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர்தான் காரணம்.

செல்வப்பெருந்தகைக்கு நெருக்கமான பெண் காங்கிரஸ் நிர்வாகிகள்தான், இந்த சம்பவத்தை ஒருங்கிணைத்து அரங்கேற்றியுள்ளார். இங்கே ஊர்வலங் களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, ஆனால், அந்த பெண் ஊர்வலமாக, கோஷங்களை எழுப்பியபடி, சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடும் நிதி நெருக்கடியில்தான் இந்த சேனலை நடத்தி வருகிறேன். பறிமுதல் செய்த பொருட்கள் இன்னும் வரவில்லை. கம்பெனி வங்கி கணக்கு முடக்கம். மாத சம்பளம் தர சிரமப்படுகிறேன். எனக்கு சேனலை மூடுவதில் உடன்பாடில்லைதான், இந்த மக்களுக்காக பணியாற்றுவதில் எனக்கு ஒரு திருப்தி இருந்தது. நல்ல ஜர்னலிசத்தை நோக்கி நான் இந்த பணியை செய்தேன். நான் ஒன்னும் மெத்த படித்த மேதாவி அல்ல. 10ம் வகுப்பு தான் படித்திருக்கிறேன்.

ஆனாலும் செய்திகளை ஆழமாக தேடினேன். வேறு வழியில்லாமல் நெருக்கடியில் தான் இந்த முடிவை எடுக்கிறேன். தோற்று போய் பின்வாங்கவில்லை; தந்திரமான பதுங்கல் என்று நினைத்துக் கொள்ளலாம். தோற்று போனேன் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் தோற்றது நான் அல்ல. என் அம்மா உயிருக்கு ஆபத்து வந்து, வாழ்நாள் முழுவதும் அந்த குற்ற உணர்ச்சியில் என்னால் வாழ முடியாது. எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி’’என்று அந்த வீடியோவில் சவுக்கு சங்கர் உருக்கமாக தெரிவித்தார்.

அவரோடு வீடியோவில் தோன்றும் மாலதி மற்றும் லியோ ஆகியோரும் தங்கள் உருக்கமான இறுதி உரையை அந்த வீடியோவில் வெளிப்படுத்தி உள்ளனர்.