சென்னை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் துரோகம் இழைக்கிறது என சிஐடியு தலைவர் சவுந்தராஜன் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழக அரசின் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணபலன்களை வழங்க கோரியும் கடந்த 30 நாட்களாக தமிழகத்தின் அனைத்து பணிமனைகள் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பிற துறைகளுக்கு நிதி ஒதுக்குவதுபோல் போக்குவரத்து துறைக்கும் அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை அதிகாரிகள் சந்தித்து பேச நிலையில், நேற்று (செப்டம்பர் 19) மாநிலம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் போராட்டம் நடைபெற்றது. இதில், வரும் காலம் பண்டிகை காலம் என்பதை மனதில் கொண்டு தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழகம் சுமுக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை 9 ஆண்டுகளுக்குப் பின்னரும் கொடுக்க மனமில்லாமல் இருப்பது நியாயமற்றது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 9 ஆண்டுகளாக பஞ்சப்படி வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
கடந்த ஆட்சியில் தொடங்கிய அவலம் திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. தொழிலாளர்களுக்கு தரவேண்டிய ரூ.500 கோடியை தர முடியாது திமுக அரசு அதிகாரிகள் கூறிவிட்டார்கள். இதனால்தான் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒப்பந்தத்தில் சிஐடியு கையெழுத்திடவில்லை.
அதிகப்படியான ஒப்பந்த தொழிலாளர்கள், எலெக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் பணிமனைகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இது திமுக அரசின்எ தனியார்மயமாக்கும் முடிவாகும். . தனியார்மயமாதல் காரணமாக பொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு இல்லாமல் சமூக நீதி அழிக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் விஷயத்தில், திமுக மற்றும் கருணாநிதியின் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவில்லை என்றால் அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தை கொண்டுசெல்வோம். மக்கள் பிரச்சினைகளுக்காக திமுக அரசை எதிர்த்து கடுமையாக போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு அக்கறை செலுத்தாவிட்டால் போராடுவதை தவிர வழியில்லை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சண்முகம் கூறியுளளார்.
மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க நடத்தப்படும் போராட்டம் வெல்ல வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன்பட்டு நிற்கிறது. அந்த போராட்டம் வெல்வதற்கான முழு ஆதரவையும் கட்சி வழங்கும். அதேநேரத்தில் தமிழக அரசு, தமிழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உரிய அக்கறை செலுத்தவில்லை என்றால் அதை எதிர்த்து போராடுவதை தவிர, அரசின் தொழிலாளர் விரோத அணுகுமுறையை கண்டிப்பதை தவிர வேறுவழியில்லை.
மாநில அரசின் உரிமைக்கான போராட்டம் வெற்றியடைய வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளும் வெற்றிபெற வேண்டியது முக்கியம். தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியபோது உயர் நீதிமன்றத்தை பயன்படுத்தி, அப்புறப்படுத்தப்பட்டனர். தாம்பரத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் தங்கும் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கொடுமையான சுரண்டல் ஒப்பந்த முறை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி மாநில அரசு கவலைப்பட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கே அதிக காலம் எடுத்துக்கொண்டால் அது நியாயமான அணுகுமுறையாக இருக்காது. அதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.