சென்னை: திமுகவில் புதியதாக ‘வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி’ உருவாக்கி இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் உள்பட அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) அஞ்சல் வாக்குச் சீட்டு வசதியை விரிவுபடுத்தி உள்ளது. இதன் காரணமாக வெளிநாடு வாழ் மக்களின் வாக்குகளை பெறும் முயற்சியாக திமுக சார்பில், வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுகழக சட்டதிட்ட விதி 6, பிரிவு 2ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை கழக உறுப்பினர்களாக இணைப்பதற்கும், வெளிநாட்டில் கழக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் ஏற்க கட்ட சட்டத்திட்டத்தின்படி, வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது.
இதன் செயலாளராக டிஆர்பி.ராஜா எம்எல்ஏ இருப்பார் என்றும், இணைச்செயலாளர்களாக டாக்டர் செந்தில்குமார் எம்.பி.யும், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாவும் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.