சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணத்தின் குடும்ப உறுப்பினரான  சிம்லா முத்து சோழன், திமுக மீதான அதிருப்தி காரணமாக  அதிமுகவில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.சற்குணபாண்டியன், இவர் திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருந்தார்.  இவர் ஆர்.கே. நகரில் சற்குணபாண்டியன் பலமுறை வெற்றிபெற்றுள்ளார்.  அவரது மறைவைத் தொடர்ந்து,  2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, களமிறக்கப்பட்டவர்தான், மறைந்த எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன். ஆனால் அந்த தேர்தலில்,  30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிம்லா முத்துச்சோழனை வீழ்த்தி  ஜெயலலிதா வெற்றி பெற்றார்.  இந்த தேர்தல் மூலம்  சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

ஆனால், சற்குண பாண்டியன் மறைவுக்கு பின் கட்சியில் உரிய மரியாதை கிடைக்காத நிலை ஏற்பட்டது அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில்,  சிம்லா முத்து சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், திமுக மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது