டெல்லி:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு தடை கோரி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வரும் 5ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் புதியதாக 5 மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யாமல், தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலுக்கு தடை கோரி மேலும்,  6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்துள்ள மனுவை, அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ள உச்சநீதி மன்றம் வரும் 5ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். தேர்தலை அறிவித்த பிறகு வார்டு பிரித்துள்ளது சரியல்ல என்ற கூறி திமுக தொடர்ந்த வழக்கால், தேர்தல் தள்ளிப்போனது. இதையடுத்து தேர்தலை நடத்த தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதை காரணம் காட்டி, வார்டுகள் வரையறை செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக. மீண்டும் உச்சநீதி மன்றத்தின் கதவை தட்டி உள்ளது.

இந்த மனுமீதான விசாரணை வரும் 5ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் வரும்  27, 30ந்தேதிகளில்  2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்நடைபெறுமா என்பது 5ந்தேதிக்கு பிறகே உறுதியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.