சென்னை:
அதிமுகவுக்கு எதிராக செயல்படும் 3அதிமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், அவர்கள்மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கும்படி, சபாநாய கரிடம் புகார் அளித்தது. அதையடுத்து, சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது நிலை குறித்து ஒரு வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் நோட்டீசில் கெடு விதித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வர்கள், சபாநாயகர் நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம் என அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் திமுக சார்பில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, சட்டசபை செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அதில், 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரியும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
தி.மு.க.வின் கோரிக்கையே ஏற்று, இது தொடர்பாக வரும் திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்படும் அதிமுக எம்எல்ஏக்களோ, அவர்கள் சார்ந்திருக்கும் அம்மா மக்கள் கட்சியோ இது குறித்து எந்தவித முயற்சியும் எடுக்காத சூழ்நிலையில், திமுக அவசரப்படுவது அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
நேர்மையான முறையில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறிய திமுக தலைவர் ஸ்டாலினின், தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் அவரது பதவி ஆசையையே காட்டுவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.