சென்னை: திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இதில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் புராரி மைதானத்தில் நூற்றுக் கணக்கான விவசாயிகள், இன்று 8வது நாளாக போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது இரவு, பகலாக அங்கு போராட்டம் நடக்கிறது.
டெல்லி போராட்டம் குறித்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், விவாயிகள் மீதான தாக்குதல் மற்றும் மத்திய அரசின் அலட்சியப்போக்கு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி மாவட்டத் தலைநகரடங்களில் போராட்டம் நடத்தப்படும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
வரும் சனிக்கிழமை (5ம் தேதி) அன்று காலை 10 மணிக்கு, மாவட்ட தலைநகரங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி போராட்டம் நடத்தபடும் என்றும் என்று அறிவித்து உள்ளார்.