நியூஸ்பாண்ட்:
மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் அ.தி.மு.க., நாளை ( 23.05.16)தான் பதவி ஏற்க இருக்கிறது. அதற்கும் எதரிக்கட்சியான தி.மு.க.வுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டது என்று ஒரு தகவல் கிளம்பியிருக்கிறது.
வெறொன்றுமில்லை… மது விற்பனை தொடர்பான ஒப்பந்தம்தானாம் அது!
இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுவது இதுதான்:
“தமிழ்நாட்டில் இருக்கும் 11 மது ஆலைகள், 7 பீர் ஆலைகளில் இருந்துதான் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்த ஆலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை திமுகவினர் மற்றும் திமுகவினரின் ஆதரவாளர்களுக்குச் சொந்தமானவை.
தமிழகத்தில் புழங்கும் மது வகைகளில் பதிக்கும் மேற்பட்டவை தி.மு.க. ஆதரவாளர்களின் ஆலைகளில் இருந்தே பெறப்படுகின்றன. கடந்த 2015 – 16 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகளில் 56 விழுக்காடும், பீர்
வகைகளில் 81விழுக்காடும் தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளில் இருந்துதான் வாங்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, 2011-12 முதல் 2015-16 வரையிலான 5ஆண்டுகளில் 27.78 கோடி மது பெட்டிகளை டாஸ்மாக் கொள்முதல் செய்துள்ளது. அவற்றில் 14.08 கோடி பெட்டிகள், அதாவது 50.68 விழுக்காடு திமுகவினர் நடத்தும் மது ஆலைகளிலிருந்து வாங்கப்பட்டவையாகும்
இதே காலத்தில் 13.62 கோடி பீர் பெட்டிகள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் 8.38 கோடி பெட்டிகள் அதாவது 61.52% திமுக ஆதரவு ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதற்குக் காரணம், திமுக ஆதரவு நிறுவனங்கள்தான் உரிய கமிசனை சரியாக கொடுக்கின்றன.
அதாவது டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது கொள் முதல் செய்யப்படும்போது ஒரு பெட்டி மதுவுக்கு 50 ரூபாயும், பீருக்கு 30 ரூபாயும் லஞ்சமாக வாங்கப்படும்.. மேலும் அமைச்சருக்கு வழங்குவதற்காக ஒரு பெட்டிக்கு கூடுதலாக ரூ.15 போட்டுத்தர வேண்டும்.
இந்த “அன்புக்கட்டளைகளை” ஏற்கும் மது ஆலைகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மேலிடம் உத்தரவிடும்.
இந்த உத்தரவை தி.மு.க. ஆதரவு ஆலைகளே சிரமேற்கொண்டு செய்வதால் அவர்களுக்கே அதிக வாய்ப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டது.
தற்போது ஆட்சி மாற்றம் நடந்தவுடனே, தி.முக ஆதரவு மது ஆலை முதலாளிகள், வழக்கம்போல அ.தி.மு.க. பக்கம் தூதுவிட ஆரம்பித்துவிட்டார்கள்.
“உலகை ஆளும்” தி.மு.க. பிரமுகரின் வழிகாட்டுதலில் ஒரு டீம், நேற்று அ.தி.மு.க. “பவர் பாயிண்ட்டை” சந்தித்தது.
உடன் பிறவா அந்த பவர் பாயிண்ட் சார்பாக, “கரன்”சிகளான அவரது உறவினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் “கரும்புள்ளி” ஒருவருக்குச் சொந்தமான பண்ணைவீ்ட்டில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
சந்திப்பின் முடிவில், “வழக்கம்போல தி.மு.க. ஆதரவு மத ஆலைகளில் இருந்தே கூடுதலான மதுப்பெட்டிகள் வாங்கப்படும். வழக்கம்போல ஒரு பெட்டி மதுவுக்கு 50 ரூபாயும், பீருக்கு 30 ரூபாயும் கொடுத்தால் போதும். ஆனால் மேலிடத்துக்கு என்று அளிக்கபப்டும் தொகை, ரூ.15 இல் இருந்து 20 ஆக உயர்த்தப்படுகிறது” என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கூடுதல் தகவல்: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மதுவால் 5.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஆய்வு தகவல் ஒன்று சொல்கிறது.