சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.  கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றதால் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக  60 தொகுதிகளை கேட்டு மிரட்டி வரும் நிலையில், தற்போது தேமுதிகவும் மிரட்டி வருவது அதிமுகவுக்கு தலைவலியை உருவாக்கி உள்ளது.

சென்தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தமிழக சட்டமன்ற தேர்தல், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அதையடுத்து, வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு 40,000 கோடி ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும், மக்கள் மற்றும் வியாபாரிகள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல் & டீசல் போன்ற எரிபொருளின் விலை உயர்வை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும் எனவும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிடக் கழக பொருளாளர் பிரேமலதா கூறியதாவது,

2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல், தமிழகத்தின் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பது குறித்து, கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஜனவரி 2021-ல் அறிவிப்பார் என கூறினார். மேலும், சட்டமன்ற தேர்தலில், விஜயகாந்த் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்வார் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக கட்சியின் நடைபெற்ற விவாதத்தின்போது, தேமுதிக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும், எந்த கட்சி 41 தொகுதிக்கும் அதிகமாக தொகுதிகளை ஒதுக்குகிறதோ  அந்த கட்சியுடன் மட்டுமே  அமைக்கும் என்று தெரிவித்ததாகவும், அவ்வாறு தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால், தேமுதிக தனித்தே தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

பிரேமலதாவின் பேச்சு, அதிமுகவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகவே கருதப்படுகிறது. ஏற்கனவே பாஜக 60 தொகுதிகளை கேட்டுவரும் நிலையில், தற்போது தேமுதிக 40 தொகுதிகளை கேட்டுள்ளது. அதுபோல பாமகவுக்கும் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் என தெரிகிறது. மேலும் உதிரிக்கட்சிகளும் ஆளாளுக்கு தொகுதிகளை கேட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கே 150க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கினால், அதிமுக தனிப்பெரும்பான்மை பெறுவதும் கேள்விக்குறியாகி விடும். இதனால், அதிமுக கூட்டணி கட்சியால் கடுமையான நெருக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற  50% உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அப்படி இருக்கும்போது, அதிமுக குறைந்தபட்சம் 134 தொகுதிகளி லாவது போட்டியிட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் கூட்டணி கட்சிகளுக்கே 150 தொகுதிகளை ஒதுக்கிவிட்டால், அதிமுக வெறும் 84 தொகுதிகளில் மட்டுமே  போட்டியிடும் வாய்ப்பு ஏற்படும். இதனால், அதிமுக வெற்றிபெற்றாலும், ஆட்சி அமைப்பதில் சிக்கலே ஏற்படும். அதனால், கூட்டணி கட்சிகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, அதிமுகவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.